Friday, September 03, 2010 2:01 PM IST
Click
சென்னை
மும்பை தாக்குதலில் சயீத் தொடர்பு குறித்து புலனாய்வு செய்ய மேலும் அவகாசம் தேவை: பாகிஸ்தான்

First Published : 25 Sep 2009 02:11:07 AM IST


நியூயார்க், செப். 24:   மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஜமாத் உத்-தவா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபிஸ் முகம்மது சய்யீத்துக்கு உள்ள தொடர்பு குறித்து புலனாய்வு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாகிஸ்தான் தெரிவித்தது.

  ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வியாழக்கிழமை இதைத் தெரிவித்தார்.

  இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நியூயார்க்கில் விரைவில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தான் அரசு சய்யீத்தை ஏற்கெனவே வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

  இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நியூயார்க்கில் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது:

  மும்பை தாக்குதல் தொடர்பாக சில குறிப்புகளை மட்டுமே பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு உறுதியான ஆதாரங்கள் எதையும் இந்தியா இதுவரை அளிக்கவில்லை.

  எனினும், இந்தியா அளித்துள்ள குறிப்புகளை ஒட்டுமொத்தமாக நாங்கள் நிராகரிக்கவில்லை. இதுகுறித்து விரிவாகப் புலனாய்வு செய்வதற்கு எங்களுக்கு மேலும் அவகாசம் தேவை என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

  மும்பை தாக்குதலில் சய்யீத்துக்கு தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்தால், நாங்கள் நிச்சயம் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

  எந்த பிரச்னைக்கும் கலந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும். பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வராததுதான் இப்போதைய பிரச்னை.

  பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், இந்தியா ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் எங்களது தரப்பு கருத்துகளை விளக்கிக் கூற முடியும்.

  லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஜாகிர் ரஹ்மான் லக்வியைக் கைது செய்ய முடிந்த எங்களால், சய்யீத்தை ஏன் கைது செய்ய முடியவில்லை என்பதைத் தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் சய்யீத்தையும் கைது செய்வோம்.

  சய்யீத் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் பைஸலாபாத் காவல் நிலையத்தில் ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் சய்யீத்தும் சம்பந்தப்பட்டுள்ளதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்த அடுத்த நிமிஷமே அவரை நாங்கள் கைது செய்து, பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

  இந்தியாவில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். இதேபோல, பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு இந்தியாவும் மரியாதை கொடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

  மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமை பெறுவதற்கு கால அவகாசம் தேவை. அதுவரை காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

  இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சய்யீத்தை உடனே கைது செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதிப்பது சரியல்ல. ஏனெனில், சய்யீத் விவகாரத்தில் இந்தியா உறுதியான ஆதாரம் எதையும் இதுவரை கொடுக்கவில்லை என்றார் மாலிக்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்