அண்ணாமலை பல்கலையில் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்
First Published : 08 Oct 2009 12:20:46 AM IST
Last Updated :
சிதம்பரம், அக். 7: கேரளத்தில் உள்ள நிஸ்ட் (சஐஐநப) என்ற ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்துடன் இணைந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மெக்னீசியம் மற்றும் இலகு உலோக கலவைகள் பற்றி கூட்டாய்வு மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ""இந்த ஒப்பந்தம், மெக்னீசியத்துடன் லித்தியம் போன்ற மென் உலோகக் கலவைகளை உருவாக்கி விண்ணியல், அணுக்கருவியல், மின்னியல், இயந்திரவியல் துறைகளில் அதன் பயன்பாடு பற்றிய ஆய்வுகளை செய்ய வழிவகுத்துள்ளது. மேலும் ஒப்பந்தம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தியியல் பொறியியல் புலத்திற்கு ரூ.4 கோடி மதிப்பிலான ஆய்வு திட்டங்கள், அரசு நிறுவனங்கள் மூலமும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் டி.எஸ்.டி. ஃபிஸ்ட் மூலமும் கூர்முனை ஆய்வுக்கான நிறுவன செலவுகள் வழங்கப்பட்டுள்ளது'' என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் ராமநாதன் முன்னிலையில் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, நிஸ்ட் நிறுவன இயக்குநர் பி.சி.பாய் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந் நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், உற்பத்தியியல் துறைத் தலைவர் கி.ரகுகாந்தன், கேரளத்தைச் சேர்ந்த முதுநிலை அறிவியல் அறிஞர் யு.டி.எஸ்.பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.