நாங்கள் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யத் தயாரா?
First Published : 29 Oct 2009 10:34:00 PM IST
Last Updated :
விழுப்புரம், அக். 28: இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை அனுப்பிய கருணாநிதி நாங்கள் இலங்கை செய்ய ஏற்பாடு செய்ய தயாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினர். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கை முள்வேலி முகாம்களில் வதைபடும் 3 லட்சம் தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரசார பயணம் நடைபெற்று வருகிறது. இப் பிரசாரம் விழுப்புரம் பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது: இலங்கையில் நான்காவது ஈழ யுத்தம் முடிவுற்றுள்ளது. இதில் அப்பாவி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து சென்ற தூதுக் குழுவினர் ராஜபட்சவை சந்தித்து சால்வை அணிவித்துவிட்டு வந்துள்ளனர். நாங்கள் இலங்கை செல்வதற்கு கருணாநிதி ஏற்பாடு செய்ய தயாராக உள்ளாரா? எங்கள் செலவில் நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம்.அறிக்கையில் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் அறிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன உள்ளது? என்பது வெளியிடப் படவில்லை. அறிக்கையின் ரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன?ஐந்தாவது ஈழ யுத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக 64 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஒரு போர்குற்ற அறிக்கையை நாங்களும் தயார் செய்தோம். அதை நடைமுறைப்படுத்த தமிழக, இந்திய அரசுகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இப்போது உலக நாடுகள் பல இலங்கையில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகள் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ராஜபட்ச, கோத்தபய ராஜபட்ச, பொன்சேகா ஆகியோர் சர்வதேச நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் அமைவது மட்டுமே என்று தீர்மானம் போட்டோம். அதையேதான் இப்போதும் கூறி வருகிறோம். ஈழப்போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசும், இந்திய அரசும்தான் கூறி வருகின்றன. ஆனால் நாங்களோ, தமிழர்களோ கூறவில்லை. தற்போது 5-வது ஈழப்போர் தொடங்கியுள்ளது. இது தமிழ் ஈழத்தை அமைப்பதில் சென்றுதான் நிற்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவு தேவை என்றார் ராமதாஸ். பாமக எம்எல்ஏ செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். பாமக மாநிலத் தலைவர் கோ.க.மணி, மதிமுக பொருளர் ஆர்.மாசிலாமணி, கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.ஸ்டாலின்மணி, தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் கா.தமிழ்வேங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.