மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.283 கோடி நிதியளிக்க கோரிக்கை
First Published : 11 Oct 2009 12:25:58 AM IST
Last Updated :
சேலம், அக். 10: சேலம் மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ.283 கோடி அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது: புது தில்லியில் கடந்த 6-ம் தேதி உணவு பதப்படுத்துதல் துறை சார்பில் மாநில அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் நானும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனும் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தலா ரூ.30.15 கோடியில் நெல் உலர வைக்கும் ஆலை மற்றும் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.241.20 கோடி நிதி ஒதுக்க கோரியுள்ளோம். பட்டுக்கோட்டையில் தேங்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் தக்காளி மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை, தேனியில் திராட்சை, திண்டுக்கல்லில் நெல்லிக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு கேட்டுள்ளோம். சேலம், கம்பம், திருவண்ணாமலை, சாத்தூர், பொள்ளாச்சி, சிவகாசி உள்ளிட்ட 19 நகரங்களில் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு ரூ.919 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். குறிப்பாக சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்துக்கு ரூ.283 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரினோம். வரும் நிதியாண்டில் இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு நிர்வாக அலுவலகம், பணியாளர்கள் குடியிருப்பு, தானியங்கி மின் ஏணி (எக்ஸ்லேட்டர்) போன்ற வசதிகள் செய்து தர வலியுறுத்தினோம். மேலும் சேலம்-கரூர் அகலப்பாதை திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.35 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை ஜூன் 2010-க்குள் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மேலும் சேலத்திலிருந்து தில்லி, மும்பை, கோல்கத்தா, திருச்சி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி ரயில் விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம் என்றார் அமைச்சர். சேலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 2006-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் சேலத்தில் இரண்டு பெரிய நிறுவனங்கள் தங்களது கிளையை அமைக்க உள்ளதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறினார். அதற்காக சுமார் 40 ஏக்கரில் முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணி தொடங்க உள்ளது. விரைவில் சேலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா செயல்படத் தொடங்கும் என்றார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.