மழை வெள்ளப் பகுதிகளைச் சீரமைக்க ராணுவம் வரும்
First Published : 11 Nov 2009 02:10:15 AM IST
Last Updated :
உதகை, நவ.10: நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ராணுவம் வரவழைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கையை இவர்கள் தமிழக முதல்வரிடம் வழங்குகின்றனர். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதேபோல தமிழக கதர் வாரியத் துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், வெள்ள நிவாரணப் பணிகளுக்கான தமிழக அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் கோவிந்தன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் வீடுகள் இடிந்தும், மண் சரிவுகளில் சிக்கியும், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான கோவிந்தனை தமிழக அரசு சிறப்பு கண்காணிப்பாளராக நியமித்துள்ளது. உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்த கோவிந்தன் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாட்டீல், கோவை மண்டல காவல்துறை தலைவர் பிரமோத்குமார், துணைத்தலைவர் பாலநாகதேவி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபில் சரத்கர் ஆகியோரும் சென்றிருந்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பலத்த மழையால் பெரும்பாலான இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவற்றை சீரமைப்பதற்காக ராணுவம் வரவழைக்கப்படும். ராணுவத்தின் ஒரு பிரிவான தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். துண்டிக்கப்பட்ட உதகை-கோத்தகிரி சாலை விரைவில் சீரமைக்கப்படும். மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இதற்கிடையே நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் கட்டபெட்டு பகுதி வரை அதிகாரிகளுடன் வந்து சாலைகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அவரையடுத்து வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தமிழக காவல்துறை துணைத்தலைவர் நடராஜ் மற்றும் கோவை மண்டல காவல்துறை தலைவர் பிரமோத்குமார் ஆகியோரும் செவ்வாய்க்கிழமை இரவு கோத்தகிரி வந்தனர். இவர்கள் புதன்கிழமையன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். கோத்தகிரியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணப் பணிகளில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் சார்பிலான நிவாரணத்தொகை, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி,சேலை ஆகியவை உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.