ஆக.2-ல் முதல்வர் கோவை வருகை
First Published : 29 Jul 2010 12:45:17 PM IST
Last Updated :
கோவை, ஜூலை 28: தமிழக முதல்வர் மு.கருணாநிதி கோவைக்கு ஆக. 2 ஆம் தேதி வருகை தருகிறார். அன்றைய தினம் மாலை சிவானந்தா காலனியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதே நாளில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 2006-ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கோவைக்கு 2007-ல் முதல்வர் கருணாநிதி வருகை தந்தார். அப்போது பீளமேடு மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். அப் பூங்காவின் திறப்பு விழா ஆக.2 ஆம் தேதி நடைபெறுகிறது. டைடல் பூங்காவை முதல்வர் கருணாநிதியால் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டு திறப்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேநாளில் முதல்வர் கருணாநிதியும் கோவைக்கு வருவதால், டைடல் பூங்கா நிகழ்ச்சியிலும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். ஆக.1, 2 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஆக.1 ஆம் தேதி நடைபெறும் சிறு, குறுந்தொழில் முனைவோர் மாநில மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். ஆக.2 ஆம் தேதி பாரதியார் பல்கலைக் கழகத்தில் ரூ.5.42 கோடியில் கட்டப்பட்டுள்ள நானோ அறிவியல் மையம் மற்றும் பன்னாட்டு மாணவர் விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.16.5 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகையையொட்டி பொதுக் கூட்டம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.