கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர் சிவாஜி
First Published : 05 Oct 2009 02:13:06 AM IST
Last Updated :
மதுரை, அக். 4: திரையுலக வரலாற்றில் ஒவ்வொரு காட்சிகளிலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என புகழாரம் சூட்டினார் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி புகழாரம் சூட்டினார். மதுரையில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கலச் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: நடிகர் திலகம் சிவாஜியின் சிலையைத் திறக்கும்போது என் என்னையறியமாலேயே கண்ணீர் வந்துவிட்டது. எனது சித்தப்பா (சிவாஜி) இப்படி சிலையாக மாறிவிட்டாரே என்ற வருத்தம் என்னுள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. சிவாஜிக்கு மூத்த மகன் நான் தான் என கமலஹாசன் கூறினார். அது தவறு. உண்மையிலேயே அவருக்கு மூத்த மகன் நான் தான். எனது தந்தையும், சிவாஜியும் உயிர்பிரியாத நண்பர்கள். என் தந்தை கருணாநிதியை சிவாஜி, மு(ன).க(ன) என்றுதான் அழைப்பார். சிவாஜி மீது எனக்கு ஒரு வருத்தம் உண்டு. எங்கள் வீட்டில் நடந்த அனைத்து திருமண நிகழ்ச்சிகளுக்கும் அவர் வந்ததுண்டு. ஆனால், என் திருமணத்திற்கு மட்டும் அவர் வரவில்லை. நான் நேரில் பத்திரிகை வைத்து அழைத்தபோது அவர் கல்யாணத்திற்கு வர மாட்டேன் என்று சொன்னார். அதனால், அவர் மீது கோபம் கொண்டு, சில காலம் பேசாமல் இருந்தேன். ஒரு விழாவில் அவர் என்னைப் பார்த்தபோது வருத்தப்படாதே என்று சொன்னார். எனது பாட்டி, முரசொலி மாறன் திருமணத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால், அது முடியாமல் போனது. ஆனால், மாறன் திருமணத்திற்கு வந்திருந்தபோது, "கலைஞர் தாய் எப்படி இருந்து வாழ்த்துவாரோ அந்த இடத்தில் இருந்து நான் வாழ்த்துகிறேன்' என்று ஒரே வார்த்தையில் அவர் வாழ்த்தி சிறப்புச் செய்தார். எனது தந்தையும் சிவாஜியும் ஆருயிர் நண்பர்கள். 1952-ல் எடுக்கப்பட்ட பராசக்தி படத்தில் முதலில் நடிகர் கே.ஆர்.ராமசாமி நடிப்பதாக இருந்தது. அவர் கால்ஷீட் தராததால் சிவாஜி நடித்தார். அப்போது கூட சிவாஜி நடிப்பதில் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாருக்கு விருப்பமில்லை. ஆனால், முதல்வர் கலைஞர், கிருஷ்ணன்-பஞ்சு, பெருமாள் போன்றோர்தான் சிவாஜியை நடிக்க வைக்க காரணமாக இருந்தவர்கள். சிவாஜி அன்றைக்கு நடிக்காமல் போயிருந்தால், இன்றைக்கு உலக மகா நடிகனைப் பார்த்திருக்க முடியுமா? நெப்போலியன் இங்கு பேசும்போதுகூட சிவாஜி நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும் உள்ளிட்ட "ப' வரிசையில் பல படங்களையும் விட்டுவிட்டார். நான் சிவாஜி நடித்த இருவர் உள்ளம் படத்தை 100 முறை பார்த்துள்ளேன். என் அப்பாவின் கதை வசனத்தில் உருவான படம் அது. அதேபோன்று, மலைக்கள்ளன் படத்தை 50 தடவையும், அபூர்வ சகோதரர்கள் படத்தை 10 தடவையும் பார்த்துள்ளேன். திரும்ப, திரும்ப படத்தைப் பார்க்கத் தூண்டுவதுதான் நடிப்பு. இன்றைக்கும் மனோகரா, கட்டபொம்மன், பராசக்தி ஆகிய படங்களின் வசனத்தைப் பற்றித்தான் பேசுகின்றனர். காட்சிகளில் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் சிவாஜி. பராசக்தி பட வெற்றியைத் தடுப்பதற்காக "தினமணி' கதிரில் "பரபிரம்மம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்தது. ஆனால், பரபிரம்மம் என்ற நாடகத்தை கருணாநிதி எழுதி, அதில் சிவாஜியை நடிக்க வைத்து வெற்றி கண்டார். குறவஞ்சி படத்தை எஸ்.எஸ்.ஆரை வைத்து 7 ஆயிரம் அடி வரை படம் எடுத்தனர். பின்னர் அவரை நீக்கிவிட்டு சிவாஜியை வைத்து அதே படத்தை தயாரிக்க முடிவு செய்தனர். சிவாஜியிடம் இந்தப் படத்தில் நடிக்குமாறு எனது தந்தை அழைத்தார். ஆனால், அவர் தயக்கம் காட்டினார். "எஸ்.எஸ்.ஆர். எனது நண்பர், ஆனால், நீ என் உயிர் நண்பர்' என்று கலைஞர் சிவாஜியிடம் கூறி நடிக்க அழைத்தார். அதன் பின்பு சிவாஜி அந்த அழைப்பை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டார்.நேரந்தவறாமை: ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு உரிய நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் சிவாஜியைத் தவிர வேறு யாரும் கிடையாது. நேரம் தவறாமை பற்றி அவர் எனக்கு அறிவுறுத்தியதன் பேரிலேயே, இன்றைக்கு சீக்கிரமே இந்த விழாவுக்கு வந்துவிட்டேன். எத்தனை படத்தில் நடித்தாலும், பாவமன்னிப்பு படத்தில் அவர் நடித்த நடிப்பை யாரும் மறக்க முடியாது. சேரன் செங்குட்டுவன் என்ற ஓரங்க நாடகத்தில் 9 நிமிஷம் கொண்ட ஒரு வசனத்தை ஒரே மூச்சில் பேசிக் காட்டியவர் சிவாஜி. எனது தம்பிமார்களுக்கு (சிவாஜி குடும்பத்தினர்) ஒரு கோரிக்கை வைக்கிறேன். மதுரை மாநகரில் உள்ள சிவாஜி சிலைக்கு எனது சார்பாக தினமும் மாலை அணிவிக்க அனுமதி அளிக்க வேண்டும். அண்ணா சிலைக்கு எனது சார்பில் தினமும் மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, சிவாஜி சிலைக்கும் மாலை அணிவிக்க அனுமதி தர வேண்டும் என்றார் மு.க.அழகிரி.