சுய உதவி குழுக்களுக்கு ரூ.99 கோடி கடன்
First Published : 29 Aug 2009 11:38:04 AM IST
Last Updated :
நாகர்கோவில், ஆக. 28: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10-ம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.99 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மகளிர் திட்டத்தின்கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு தகுதிகள் அடிப்படையில் கடன்களை தாமதமின்றி வங்கிகள் வழங்க வேண்டும். 2009-10-ம் ஆண்டில் சுயஉதவி குழுக்களுக்கு தமிழக அரசு ரூ.99 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள்களில் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். மனுக்கள் மீது வங்கிகள் எடுக்கும் நடவடிக்கையின் விவரங்கள் அந்தந்த மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
2008-09-ம் ஆண்டு கடன் திட்டத்தின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளும், 31.3.2009 வரை விவசாய கடன்கள் ரூ.1210.22 கோடியும், தொழில் கடன்கள் ரூ.37.86 கோடியும், சேவைத் தொழிலுக்கு ரூ.283.50 கோடியும் என்று மொத்தமாக ரூ.1531.58 கோடி வழங்கியுள்ளன. இதுவரை 11885 புதிய விவசாயிகள் இனம் காணப்பட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி கடன் திட்டத்தின்படி கடந்த 31.7.2009 வரை 229 மாணவர்களுக்கு தொழில்கல்வி மற்றம் மேல்படிப்பு பயில கல்வி கடன் அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு 2009-10-ம் ஆண்டில் இதுவரை ரூ.536.20 லட்சம் 893 மாணவர்களுக்கு கடன்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 50860 சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளன. 2009-10-ம் ஆண்டில் இதுவரை வங்கிகள் 1099 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.16.63 கோடி கடன் வழங்கியுள்ளன என்றார் ஆட்சியர்.
2009-10-ம் ஆண்டுக்கான கடன் திட்டங்களை செயல்படுத்த அனைத்து வங்கிகளும் ரூ.1560.31 கோடிக்கு செயல் திட்டம் தீட்டியுள்ளன. இத் திட்டத்தின் திட்ட அறிக்கையை ஆட்சியர் வெளியிட்டார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என். சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார்.
இத் திட்டத்தில் 2009-10-ம் ஆண்டில் ரூ.1063.03 கோடி விவசாயத்துக்கும், ரூ.125.45 கோடி தொழில் துறைக்கும், ரூ.371.83 கோடி சேவை தொழில்களுக்கும் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
மகளிர் திட்ட அலுவலர் எஸ். தெய்வநாயகி, தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஆர். சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னோடி வங்கி அதிகாரி பி. சந்திரசேகரன் நன்றி கூறினார்.