மர்ம காய்ச்சல்: 12 நாள்களில் 8 பேர் பலி
First Published : 28 Jul 2010 01:27:07 PM IST
Last Updated :
நாகர்கோவில், ஜூலை 27: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவிய மர்ம காய்ச்சலுக்கு கடந்த 12 நாள்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர். இம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு எவ்விதமான காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்பதால் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. காய்ச்சல் தாக்கியவர்களின் உயிரிழப்பு சம்பவங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் எள்ளுவிளை சத்தியநேசன் மனைவி மரியரத்தினம் (53), நெட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லிசாமோள் சந்திரா (20), குலசேகரம் அருகே உண்ணியூர்கோணத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் மகன் ஜெசன் (9), கன்னியாகுமரி பிரேமன் என்பவரது குழந்தை ரியா, மாதவாலயம் பஷீர் மகன் மாஹின் (24), நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் வித்யா (32) ஆகியோர் கடந்த சில நாள்களில் காய்ச்சல் பாதிப்பால் இறந்துள்ளனர். இந்நிலையில் ஒரு போலீஸ்காரரும், ஒரு சிறுமியும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்துள்ளனர்.வடசேரி புளியவிளைதெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). மணிமுத்தாறிலுள்ள சிறப்பு காவல்படையில் பணியாற்றி வந்தார். சில வாரங்களுக்குமுன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுபோல் திருவிதாங்கோட்டை அடுத்த முகமாத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜான்சன் மகள் நித்யா (6). அப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.