கன்னியாகுமரியில் ரூ. 6.21 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 8 பேர் கைது
First Published : 29 Jul 2010 01:06:48 PM IST
Last Updated :
கன்னியாகுமரி, ஜூலை 28: கன்னியாகுமரி அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முபாரக் உசேன் (23), முகமது முஸ்தபாஷேக் (25), முகமது சபீக் (24), முகமது அஸ்ராஉல் ஷேக் (22), முஜ்புர்ஷேக் (32), நாசிர்ஷேக் (30), அனபதுஷேக் (22), முகமது மதிபூர் (23). இவர்கள் 8 பேரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரி வந்து அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினர். இவர்களின் மூன்று பேர் சன்னதி தெருவில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைக்கு புதன்கிழமை சென்று ரூ. 1000 நோட்டை மாற்ற முயன்றனர். இந்த நோட்டின் மீது மதுக் கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸôருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்துவந்த போலீஸôர் மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்தது கள்ள நோட்டு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அறையை சோதனையிட்டனர். அப்போது ரூ. 6 லட்சத்து 21 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தப்பிஓடிய மீதமுள்ள 5 பேரும் ரயில் நிலையம் அருகே நின்றபோது அவர்களை போலீஸôர் கைது செய்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் கன்னியாகுமரி காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜூலை 24-ம் தேதி ஹவுராவில் இருந்து ரயில் மூலம் 8 பேரும் சென்னை வந்துள்ளனர். அங்கிருந்து பஸ் மூலமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரி வந்துள்ளனர். கன்னியாகுமரி தனியார் விடுதியில் தங்கியிருந்த 3 பேர், ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றபோது போலீஸôரிடம் பிடிபட்டனர். விரைந்துசென்ற போலீஸôர் தப்பி ஓட முயன்ற 5 பேரை கைது செய்து ரூ. 6 லட்சத்து 21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஹிந்தி மொழியில் பேசுவதால் மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸôர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் இவர்களின் பின்னணி தெரியவரும் என்றார் அவர்.