பதுக்கிவைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
First Published : 04 Nov 2009 09:54:49 AM IST
Last Updated :
தஞ்சாவூர், நவ. 3: தஞ்சை ராமாபுரத்தில், கள்ளச் சந்தையில் விற்பதற்காக தோட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 95 சமையல் காஸ் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூரை அடுத்துள்ள ராமாபுரத்திலுள்ள ஒருவரது தோட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாரத் எரிவாயு நிறுவன துணைப் பொது மேலாளர் சி. முத்துசாமி, இன்டேன் எரிவாயு நிறுவன அதிகாரி கோவிந்தராஜன், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் திங்கள்கிழமை இரவு ராமாபுரம் சென்று, அந்தத் தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் 85, வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்கள் 10 மற்றும் மினி லாரி, சிலிண்டரிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றப் பயன்படும் சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த 12 தமிழக அரசின் இலவச எரிவாயு அடுப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் வழக்குப் பதிந்து, தோட்டத்தின் உரிமையாளரான சுப்பிரமணியனைத் தேடி வருகின்றனர்.