மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி
First Published : 14 Nov 2009 05:22:02 AM IST
Last Updated :
பொன்னமராவதி,நவ 13: எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் வரும்; அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அதை மீண்டும் கொண்டுவருவார் என்றார் எம்ஜிஆர் மன்றச் செயலர் டி. ஜெயக்குமார்.பொன்னமராவதியில் ஜெயலலிதா பேரவை கிளைக் கழக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பேரவை நிர்வாகிகள் கையேட்டை வெளியிட்டு,கூட்டத்தில் அவர் பேசியது:விலைவாசி உயர்வு பிரச்னை, காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னை என்று அனைத்துப் பிரச்னைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் இப்போது மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை அதிமுகவால் மட்டுமே ஏற்படுத்த முடியும். தமிழக மக்கள் எதிர்பார்க்கும் எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் ஜெயலலிதா கொண்டுவருவார். ஆனால்,அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றார் ஜெயக்குமார்.கூட்டத்திற்கு பொன்னமராவதி அதிமுக ஒன்றியச் செயலர் அழகு சுப்பையா தலைமை வகித்தார். திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமார், முன்னாள் அமைச்சர் எம். ராதாகிருஷ்ணன், சட்டபேரவை உறுப்பினர்கள் குளத்தூர் என். சுப்பிரமணியன்,புதுக்கோட்டை ஆர். நெடுஞ்செழியன்,கட்சி நிர்வாகிகள் பி. மன்மதன், பி.எல். ராஜேந்திரன்,என். செல்வராஜன், ஆர். செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டச் செயலர் டி. கருப்பையா வரவேற்றார்.