காத்மாண்டு, அக். 12: எவரெஸ்ட் மலைச் சிகரத்தை முதன் முதலில் எட்டிய இந்தியாவைச் சேர்ந்த டென்சிங் நார்கே ஷெர்பா, நியூஸிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோரைக் கெüரவிக்கும் வகையில், அவர்களது உருவச் சிலைகள் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
நேபாளத்தில் முதலாவது சுற்றுலா ஹோட்டலை நிறுவிய ரஷியாவைச் சேர்ந்த போரிஸ் லிடானேவிச்சின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
நேபாளத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், இவர்கள் மூவரின் சிலைகளையும் நேபாள சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சரத் சிங் பண்டாரியும், ரஷிய கலாசாரத் துறை அமைச்சர் திபலோவ் அலெக்சாந்தரும் திறந்துவைத்தனர்.
கடந்த 1953 ஆம் ஆண்டு, மே மாதம் 29 ஆம் தேதி டென்சிங்கும், ஹிலாரியும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் சென்றடைந்தனர். இதன்மூலம், உலக அரங்கில் சுற்றுலாத் துறையில் நேபாளத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியது.
எனினும், நேபாளத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பிறகு, பொருளாதார ரீதியில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என, அந்த நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் சரத் சிங் பண்டாரி கூறினார்.
நேபாளத்துக்கும், ரஷியாவுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கு நேபாள அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும் பண்டாரி தெரிவித்தார்.