சொத்து விவரங்களை வெளியிட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
First Published : 03 Nov 2009 03:07:40 AM IST
Last Updated :
புது தில்லி, நவ. 2: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட 21 நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை திங்கள்கிழமை வெளியிட்டனர். அவர்கள் சுயமாகவே தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டதாக உச்ச நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெறுவார் என தில்லி உயர் நீதிமன்றம் செப்டம்பர் 2-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்துள்ளது. 1977 தீர்மானத்தின்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரப் படிவத்தைப் பூர்த்தி செய்து வருகின்றனர். காலமாற்றத்துக்கேற்ப சொத்து விவரங்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்: இவருக்கு சாண்ட்ரோ காரும், 20 பவுன் நகைகளும், ரூ.9.25 லட்சம் மதிப்பில் கேரளத்தில் 3 வீடுகளும், ரூ.8.8 லட்சம் மதிப்பில் கேரளம் மற்றும் ஃபரீதாபாதில் 2 மனைகளும் உள்ளன. அவரது மனைவி நிர்மலா பாலகிருஷ்ணனுக்கு கேரளத்தில் 2 ஏக்கர் 68 சென்ட் நிலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன்: இவருக்கு பெங்களூரில் ரூ.38.61 லட்சம் மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் உள்ளன. இது தவிர 100 நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. அவரது மனைவி வசந்திக்கு பெங்களூரில் 978 சதுர அடியில் 3 அலுவலக கட்டடங்கள் உள்ளன. நீதிபதி மார்கண்டேய கட்ஜு: இவருக்கு அலாகாபாதில் மூதாதையர் சொத்து உள்ளது. ரூ.28 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை உள்ளது. பொது சேம நல நிதியில் ரூ.21 லட்சம் உள்ளது. நீதிபதி பி.சதாசிவம்: இவருக்கு சென்னையில் 2 அடுக்கு வீடு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 12.49 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. தனது மற்றும் நெருங்கிய உறவினர்களின் பேரில் ரூ.15 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை உள்ளது. மொய்லி வரவேற்பு: நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட்டது மிகச் சிறந்த செயல் என மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.