Friday, September 03, 2010 2:06 PM IST
Click
முக்கியச் செய்திகள்
மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு கெட திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

First Published : 06 Nov 2009 11:50:00 PM IST


கோல்கத்தா, நவ. 5:   மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலை சீர்கெடுவதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

  மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

  மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலையை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யவுக்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறியிருந்தார்.

  இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பிமன்போஸ், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

  மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக சட்டத்தை மீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் அக்கட்சியினர்தான். இதன் மூலம் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  நிலைமையைக் கையாள்வதில் மாநில அரசு எந்த விதத்தில் குறைந்துவிட்டது என்பதை மத்திய அமைச்சர் விளக்க வேண்டும்.

  மாவோயிஸ்டுகள் அனைவரும் ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களாக இருந்தவர்கள்தான் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றபின் மாவோயிஸ்ட் இயக்கம் உருவானதை புரிந்து கொண்டு பேச வேண்டும்.

  உள்துறை அமைச்சரைச் சந்தித்துப்பேசிய பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி, தனது கட்சிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைப் போல பேசி வருகிறார்.

  தற்போது சிறையில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் சத்ரதர் மஹாதோவுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

  மிதுனபுரி பகுதியில் ராணுவத்தினரும் போலீஸôரும் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது அதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியவர் மம்தா பானர்ஜி. இதிலிருந்தே மாவோயிஸ்டுகளுடன் அவருக்குள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடியும்.

  மாவோயிஸ்டுகளும், மார்க்சிஸ்டுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல என மம்தா பானர்ஜி குறிப்பிடுவது தவறானது. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாவோயிஸ்டுகளால் உயிரிழந்துள்ளனர்.

  ஒருவேளை அவர் சொல்வதைப் போல கம்யூனிஸ்டும் மாவோயிஸ்டும் ஒன்றாயிருந்தால் தனித்தனி பிரிவுகள் எதற்கு. மாவோயிஸ்டுகளுடன் மம்தாவுக்கு உள்ள தொடர்பை மார்க்சிஸ்ட் கட்சி வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கிய பிறகு, அதை மறைக்கும் நடவடிக்கையில் மம்தா தீவிரமாக இறங்கியுள்ளார்.

  1977-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததாக மம்தா கூறுவது தவறு நாட்டில் நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

  மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 112 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக போஸ் கூறினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்