Tuesday, February 09, 2010 7:28 PM IST
Click
இந்தியா
அடுத்த மகாராஷ்டிர முதல்வர் யார்?

First Published : 19 Oct 2009 11:05:00 PM IST


புது தில்லி, அக். 18: மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணிதான் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறது என்று கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகள் மட்டும் அல்ல -அரசியல் பார்வையாளர்களும் கூறுவதால், முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி இப்போது பெரிதாகி வருகிறது.

  முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் எந்த மாநிலத்திலும் எப்போதும் குறைவே வந்ததில்லை. அதிலும் மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களில் இவரைவிட்டால் வேறு ஒருவர் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்கானவர், திறமையானவர் என்று எவரும் இல்லை. எனவே இந்தக் கேள்வி சாதாரணக் கேள்வியாக இல்லை.

  இப்போது மகாராஷ்டிர முதல்வராகப் பதவி வகிப்பவர் அசோக் சவாண். மும்பையில் பயங்கரவாதிகள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபோது மாநிலத்திலும் நாட்டிலும் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்துக்கு வடிகாலாக அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அகற்றப்பட்டு அசோக் சவாண் முதலமைச்சராகப் பதவியில் அமர்த்தப்பட்டார்.

  இப்போது முதலமைச்சர் பதவிக்கு அசோக் சவாண், விலாஸ்ராவ் தேஷ்முக், நாராயண் ரானே ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் சுசீல்குமார் ஷிண்டே மற்றும் பிருதிவிராஜ் சவாண் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இவர்கள் அல்லாமல் இன்னொருவர் கூட கடைசி கட்டத்தில் இடம் பெறலாம்.

  அக்டோபர் 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அன்றைய பிற்பகலிலேயே நிலவரம் தெரிந்துவிடும். கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டு எங்களுடைய கூட்டணிதான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று பாரதிய ஜனதா-சிவசேனை கூட்டணி கூறிக் கொண்டாலும் வாய்ப்பு குறைவு என்பதே அனைவரின் கணிப்பாகும்.

  இப்போதைய முதலமைச்சர் அசோக் சவாண் தலைமையில் தேர்தலைச் சந்தித்து கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவிருக்கும் நிலையில் வேறு யாரை முதல்வராகப் போடுவார்கள், அவரே நீடிப்பார் என்று அசோக் சவாணின் ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

  கடந்த பொதுத் தேர்தலை சுசீல்குமார் ஷிண்டே தலைமையில்தான் சந்தித்தார்கள், ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவர் முதல்வராக நீடிக்கவில்லையே என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  சுசீல்குமார் ஷிண்டேயும் பிருதிவிராஜ் சவாணும் தாங்கள் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவியே சுகமாக இருப்பதாகவும் மாநில அரசியலுக்குத் திரும்ப விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் இதெல்லாம் பிரசவ வைராக்கியம் மாதிரிதான். கட்சித் தலைமை கண் ஜாடை காட்டினாலோ, அல்லது மற்றவரைவிட இவருக்கு எதிர்ப்பு குறைவு என்று கட்சித் தலைமை தீர்மானித்தாலோ பட்டம் கட்டிக்கொள்ள அவர்கள் இருவருமே தயார்.

  விலாஸ்ராவ் தேஷ்முக் என்ன ஆற்றலில் குறைந்தவரா, பயங்கரவாதிகள் வந்து திடீரென்று தாக்கினால் யார்தான் என்ன செய்ய முடியும், அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் என்ன என்று அவருடைய ஆதரவாளர்கள் இப்போதே வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டனர்.

  பிருதிவிராஜ் சவாணை சாதாரணமாக எடை போடாதீர்கள்; அம்மாவிடமே (சோனியா காந்தி) நல்ல பெயர் வாங்கியவர், அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்; அடுத்த முதலமைச்சர் அவர்தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் மற்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

  அபிஷேக் சிங்வி:  காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படியே முதல்வர் தீர்மானம் நடைபெறும் என்று கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருக்கிறார்.

  தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, புதிய சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். அதில் அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும். பிறகு தில்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அத் தகவல் தெரிவிக்கப்படும். முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்படக்கூடியவர்களின் பட்டியலும் அவரிடம் தரப்படும். அதில் ஒருவரை அவர் தேர்வு செய்வார். பிறகு மாநில சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி அதில் ஒப்புதல் பெறப்படும் அல்லது வரவேற்றுத் தீர்மானம் இயற்றப்படும் என்று தெரிகிறது.

  எங்கே தங்களைக் கூட்டணியிலிருந்தே விலக்கிவிடுவார்களோ என்று அஞ்சிய தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இப்போது முதல்வர் பதவி பற்றிய கேள்விகளையே தவிர்த்துவிடுகின்றனர். அது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம், அவர்கள் யாரைத் தேர்வு செய்தாலும் நாங்கள் ஒத்துழைப்போம் என்றே கூறுகின்றனர்.
கருத்துக்கள்

IRRESPECTIVE OF THE PERSON- RESULTS ONE THING IS CLEAR; No CM or MLA is going to bother about the poor, destitutes, below poverty souls. no MLA or CM is interested in improving the STATE infrastucture like roads, water, electricity. RAM or Ravan- it makes no difference in TN/ Kerala/ Karnataka/ or Maharshtra. in India politicians are Ram to look , Ravan in reality.. my advance condolences to peole of Maharshtra.

By Narasimhan
10/19/2009 10:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்