அருணாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி
First Published : 23 Oct 2009 01:24:42 AM IST
Last Updated :
இடா நகர், அக். 22: அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. மத்தியில் காங்கிரஸின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்ற 39 தொகுதிகளில் முதலமைச்சர் டோர்ஜீ மற்றும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 58 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 41 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இம்மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் போட்டியிட்டது. 7 முறை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு பெற்ற முன்னாள் முதல்வர் கெகோங் அபாங் மற்றும் அவருடைய மகன் ஒமக் அபாங் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.