மும்பை, அக். 23: பிறந்தநாள் பரிசாக மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணுக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
நடந்துமுடிந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்க உள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு விலாஸ்ராவ் தேஷ்முக், முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அசோக் சவாண் முதல்வராக நியமிக்கப்பட்டார். கடந்த 10 மாதங்களாக முதல்வராக உள்ள அவரது செயல்பாட்டில் காங்கிரஸ் தலைமை திருப்தி அடைந்துள்ளது.
வரும் 28-ம் தேதி சவாண், 51-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். மீண்டும் அவருக்கு முதல்வர் பதவி வழங்குவது காங்கிரஸ் தலைமையால் வழங்கப்படும் பிறந்தநாள் பரிசாக கருதுவதாக அவரது தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.