எனது தந்தை எஸ்.பி. சவாண்தான் அரசு நிர்வாகத்தை கற்றுக் கொடுத்தார்: அசோக் சவாண்
First Published : 26 Oct 2009 01:06:32 AM IST
Last Updated :
மும்பை, அக். 25: அரசு நிர்வாகக் கலையை தனது தந்தை எஸ்.பி. சவாண் தனக்கு கற்றுக் கொடுத்ததாக மகாராஷ்டிர மாநில முதல்வராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்கவிருக்கும் அசோக் சவாண் கூறினார். மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்தக் கூட்டணியின் முதல்வராக அசோக் சவாணை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுத்தார். இந்த நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அசோக் சவாண் கூறியது: எனது தந்தை எஸ்.பி. சவாணின் வழிகாட்டுதலால்தான் அரசு நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களை நான் கற்றுக் கொண்டேன். அது இன்னமும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. மகாராஷ்டிர மாநில மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் விதத்தில், அரசியலில் நான் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது குறித்து பெருமிதம் கொள்கிறேன். எங்களது அரசின் நல்ல திட்டங்களுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் விதத்தில் மகாராஷ்டிர மக்கள் எங்களை மீண்டும் வெற்றி பெறச் செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவிக்கு காங்கிரஸில் பலத்த போட்டி இருந்தது. இதில் தவறு ஏதும் இல்லை. எனினும், நான் மீண்டும் முதல்வராவதை தனிப்பட்ட முறையில் யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. முதல்வர் பதவிக்கான போட்டி தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. மீண்டும் மக்களுக்குப் பணியாற்றுவதில் நாங்கள் இனி கவனம் செலுத்துவோம். மகாராஷ்டிரத்தில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்குத் தீர்வு கண்டு, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றார் அசோக் சவாண். விலாஸ்ராவ் தேஷ்முக்: முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் உள்ளதாக பேச்சு அடிபட்டது. எனினும், இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு நாள்களுக்கு முன்னர் விலாஸ்ராவ் தேஷ்முக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதால், அவரும் முதல்வராக விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. கொண்டாட்டம்: இதனிடையில், முதல்வர் அசோக் சவாணின் சொந்த ஊரான நான்டெட் நகரில் அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகளை வெடித்தும், ஊர்வலம் நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர முதல்வராகக் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் அசோக் சவாண் பொறுப்பேற்றார். எனவே, அவருக்கு இரண்டாவது முறையாக முதல்வர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது சரியானதே என அவரது ஆதரவாளர் ஒருவர் கூறினார்.