புதிய அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி: தில்லியிடம் தமிழகம் வலியுறுத்தல்
First Published : 16 Nov 2009 12:24:00 AM IST
Last Updated :
16 Nov 2009 04:04:04 AM IST
புதுதில்லி, நவ. 15: தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள 3 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில மின் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை:12-வது ஐந்தாண்டு திட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமிழக அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மொத்தம் 3,400 மெகாவாட் திறன் கொண்ட 3 அனல் மின் நிலையங்களை அமைக்க முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அனல் மின் நிலையங்களுக்கு நீண்ட காலத்துக்கு நிலக்கரி அளிப்பது குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த திட்டங்களுக்கு நிலக்கரி வழங்குவது குறித்து உடனடியாக உறுதி செய்யவேண்டும்.தமிழ்நாடு மின் வாரியம் தேசிய அனல் மின் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக வள்ளூரில் 1,500 மெகாவாட் மின் திட்டமும், தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் வாரியமும், நெய்வேலி நிலக்கரி கழகமும் இணைந்த 1,000 மெகாவாட் மின் திட்டமும் வளர்ச்சி நிலையில் உள்ளன. எதிர்காலத் தேவையை சமாளிப்பதற்கு, தமிழகத்தில் நிறுவப்பட்ட இந்த 2 திட்டங்களில் இருந்து 75 சதவீத மின்சாரத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.கூடங்குளத்தில் அமைக்கப்படும் 2,000 மெகாவாட் அணு மின் நிலையம், நெய்வேலியில் 500 மெகாவாட் தயாரிக்கும் 2-வது அனல் மின் நிலையம் ஆகியவை 2010 ஜூன் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திரவ எரிபொருளுக்கு விற்பனை வரி விலக்கை மத்திய அரசு அளித்தால் ஒட்டுமொத்தமாக மின் உற்பத்தி யூனிட்டுக்கு 50 முதல் 60 பைசா வரை குறையும் என்றார்.