மன்மோகன் அமெரிக்கா பயணம்
First Published : 22 Nov 2009 10:54:00 PM IST
Last Updated :
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன் சிங். (கோப்பு படம்).
புது தில்லி, நவ.21: இந்தியாவில் பயங்கரவாத செயல்களைத் தூண்டும் பாகிஸ்தானின் விஷமத்தனமான செயல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விவாதிக்கப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். தனது சுற்றுப் பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களையும் விவாதிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதமருடன் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் அமெரிக்கா செல்கின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் ஒபாமாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
கடந்த ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் முழுக்க முழுக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்களை இந்தியா அளித்தபோதிலும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபருடன் பேசும்போது, பாகிஸ்தானிலிருந்து தூண்டப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல் குறித்து விரிவாக பேச உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதம், உலகை அச்சுறுத்தும் புவி வெப்ப நிலை உயர்வு மற்றும் சர்வதேச பொருளாதார தேக்க நிலை குறித்து ஒபாமாவுடன் மன்மோகன் சிங் விவாதிக்க உள்ளார்.
அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றுமாறு பிரதமர் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது. அத்துடன் தோஹா சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தை மற்றும் அணு ஆயுத பரவல் தடைச் சட்டம் குறித்தும் பிரதமர் விவாதிக்க உள்ளார்.
ஆப்கனிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பிற பிராந்திய விவகாரங்களும் இருவரது பேச்சில் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் சபை சீரமைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பிராந்திய அடிப்படையில் நிரந்தர உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்திருந்தது. இந்த விஷயம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. பயங்கரவாதம் தொடர்பாக புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
இதேபோல மரபுசாரா எரிசக்தி மற்றும் விவசாயத்துறையிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருவதாக வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு, சேவைத்துறை, எரிசக்தி, அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உயர் தொழிநுட்பம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்று 10 மாதங்கள் ஆனபோதிலும், வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வ விருந்து அளிப்பது இதுவே முதல் முறையாகும். அத்தகைய கெüரவமிக்க விருந்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருந்து அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக வெள்ளை மாளிகையின் தென்பகுதியில் பிரமாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் முக்கிய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 400 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பிற துறைகளின் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் பேச்சு நடத்த உள்ளார். அமெரிக்க-இந்திய தொழில் வர்த்தக சபை ஏற்பாடு செய்துள்ள தொழிலதிபர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
அமெரிக்க வெளியுறவத்துறை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்கிறார். வாஷிங்டனில் உள்ள உட்ரோ வில்சன் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னணி கருத்துக் கணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். அத்துடன் இங்கு வாழும் இந்திய-அமெரிக்க சமூகத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளார்.
வாஷிங்டனில் நான்கு நாள் தங்கியிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்து ஸ்பெயினில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டுக்குப் பயணமாகிறார். அங்கு நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இங்கு சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள புவி வெப்பமடைதல், தீவிரவாதம் குறித்தும் பேச உள்ளார்.