7 ஆயிரம் சேவை மையங்கள் தொடங்க எஸ்.பி.ஐ. திட்டம்
First Published : 30 Aug 2009 01:12:50 AM IST
Last Updated :
கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடந்த விழாவில், பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறையில் எழுதுவதற்கான கருவிகள் வாங்க உதவித்
கடலூர், ஆக. 29: தமிழகத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 7 ஆயிரம் வாடிக்கையாளர் சேவை மையங்கள் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக, அந்த வங்கியின் சென்னை வட்டாரத் தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார். பாரத் ஸ்டேட் வங்கியும் 3ஐ இன்ஃபோடெக் அறக்கட்டளையும் இணைந்து, ஏற்பாடு செய்து உள்ள வணிகத் தொடர்பாளர் திட்டத் தொடக்க விழா மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத் திறப்பு விழாவும் கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் நடந்தது. தமிழகத்தின் முதல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் திறந்து வைத்து, தலைமைப் பொதுமேலாளர் ஜெ.சந்திரசேகரன் பேசியது: கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும். அதற்காக ""அனைவருக்கும் நிதி ஆதாரம்'' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத் திட்டத்தைச் செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி, பல முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. தமிழகத்தில் 3ஐ இன்ஃபோடெக் நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர் சேவை மையங்களை பாரத ஸ்டேட் வங்கி தோற்றுவித்து வருகிறது. தமிழகத்தில் இந்த நிறுவனம் 4,400 இடங்களில் பொது சேவை மையங்களை உருவாக்க அரசிடம் அனுமதி பெற்று உள்ளது. தமிழகத்தில் முதல் வாடிக்கையாளர் சேவை மையம் குள்ளஞ்சாவடியில் திறக்கப்படுகிறது. இந்த மையத்தில் பொதுமக்களுக்கு கணினிக் கல்வி, இணையதளச் சேவை உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும். அத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகளும் அளிக்கப்படும். இந்த மையத்தின் மூலம் ஒருவர் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி ரூ. 50 ஆயிரம் வரை பணம் செலுத்தலாம். ஒரு நாளில் ரூ. 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம். அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம். பயிர்க் கடன், வாகனக் கடன்களும் கிடைக்கும். இத்தகைய வாடிக்கையாளர் சேவை மையங்கள் தமிழகத்தில், 7 ஆயிரம் இடங்களில் தொடங்க முடிவு செய்து உள்ளோம். ஒவ்வொரு சேவை மையத்திலும் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வைப்புத் தொகை திரட்டவும், ரூ. 1.5 கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ. 17 ஆயிரம் கோடிக்கு கூடுதல் வணிகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் சந்திரசேகரன். கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் பள்ளி, குள்ளஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு குடிநீர்த் தொட்டிகள், கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பிரெய்லி முறையில் எழுதும் கருவிகள் வாங்க உதவித் தொகை ஆகியவற்றை சந்திரசேகரன் வழங்கினார். துணைப் பொதுமேலாளர் சதாசிவம், 3ஐ இன்ஃபோடெக் நிறுவன அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர். உதவிப் பொது மேலாளர்கள் சுரேஷ்ஜான்சன், ராமானுஜம், மஞ்சக்குப்பம் கிளை மேலாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி கிளை மேலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.