சேதுசமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு
First Published : 04 Sep 2009 11:36:35 PM IST
Last Updated :
05 Sep 2009 03:11:23 AM IST
புது தில்லி, செப். 4: சேது சமுத்திரத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
ராமேசுவரம் அருகே கப்பல் போக்குவரத்துக்குக்காக சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என கூறி கப்பல் வழித்தடத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரியும் ராமர் பாலம் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப் பாதை குறித்து ஆராய அரசு சார்பில் கமிட்டி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆர்.கே.பச்செüரி தலைமையிலான கமிட்டி மாற்று பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தது. இதுதொடர்பாக தேசிய கடல் ஆய்வு மையத்திடம் (நியோ) ராமர் பாலத்துக்கு பதிலாக தனுஷ்கோடி வழியாக திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ளுமாறு கமிட்டி கேட்டுக்கொண்டது. இதுதொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு கூறாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய சுவாமி, "இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் நீண்டநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் "நியோ' தாக்கல் செய்துள்ள ஆய்வு அறிக்கையில் போதுமான தகவல்கள் இல்லாததால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் உள்ளது. மேலும் மாற்றுப் பாதையில் திட்டம் மேற்கொண்டாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து நிபுணர் கமிட்டி சந்தேகம் தெரிவித்துள்ளது.
எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.