நதிநீர் இணைப்பு: ராகுல் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு: இல. கணேசன்
First Published : 13 Sep 2009 01:45:15 AM IST
Last Updated :
சென்னை, செப்.12: ""தேசிய அளவில் நதிகளை இணைப்பது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்ற கற்பனையான காரணத்தைக் கூறி மக்களை ஏமாற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி முயல்கிறார்'' என்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் இல. கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து இல. கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:ஒரு புறம் வெள்ளமும், மறு புறம் தண்ணீர் பஞ்சமும் நிலவுகிற நிலையை மாற்ற, வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நதிகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், காங்கிரஸ் தலைமையிலான அரசு, நதிநீர் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போட்டது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் முன்னுரிமை தரவில்லை என கருதப்பட்டது.ஆனால் தமிழகத்துக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி, நதிநீர் இணைப்புத் திட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். நதிகளை இணைப்பது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று கற்பனையான காரணத்தைக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார். இவருடைய கருத்துக்கு முதல்வர் கருணாநிதி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.ராகுல் காந்தியின் கருத்துக்கு தமிழக மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் என இல. கணேசன் தெரிவித்துள்ளார்.ராமகோபாலன்: இதுபோல் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலனும் கண்டனம் தெரிவித்துள்ளார். ""தேசிய நதிநீர் இணைப்பு ஆபத்தானது என்ற ராகுல் பேச்சு பொறுப்பற்றது. கண்டிக்கத்தக்கது. நதிநீர் இணைப்புக்கு பல நிபுணர்கள் அளித்த ஆய்வு முடிவுகள் மத்திய அரசிடம் உள்ளன. உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் பேசுகிறார். இதற்கு நதி நீர் இணைப்பு முக்கியம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த முறை ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் நதி நீர் இணைப்பு ஆய்வில் இருப்பதாகவும், விரைவில் திட்டம் வகுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் பதில் அளித்தது. ஆனால், பல ஆண்டுகள் கடந்த பின்னும் எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் கட்சியின் உள்நோக்கத்தை ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசு தேசிய நதி நீர் இணைப்பு குறித்து தனது செயல்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.