Tuesday, February 09, 2010 9:20 PM IST
Click
தமிழகம்
இலவச எரிவாயு இணைப்புகள்: நிலுவை இன்றி ஒரு மாதத்தில் வழங்கப்படும்

First Published : 20 Oct 2009 01:20:43 AM IST


சென்னை, அக். 19: "கடந்த நிதியாண்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இலவச கேஸ் இணைப்புகள் அனைத்தும் வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் வழங்கப்படும்' என தமிழக அரசிடம் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை உறுதி அளித்தனர்.
  இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 - 2009-ம் ஆண்டுக்கு 6 லட்சம் இலவச கேஸ் இணைப்புகளை வழங்க எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன.
  அக்டோபர் மாதக் கணக்கின்படி, 4 லட்சம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  மேலும், கேஸ் இணைப்புக்கான உபகரணங்கள் முழுவதும் அளிக்கப்படுவதில்லை எனவும், கேஸ் சிலிண்டர்கள் உடனுக்குடன் தரப்படுவதில்லை என்ற புகார்களும் பொது மக்களிடம் இருந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உணவு அமைச்சர் ஆலோசனை:  இந்தக் குறைபாடுகளைக் களையும் வகையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார், உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு.
  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அவர் கூறியது: ""இலவச கேஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் சிலிண்டருக்காக விண்ணப்பித்து நீண்ட நாள்கள் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே, சிலிண்டர்களை உரிய நேரத்தில் அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  மாவட்டங்களில் கூட்டம்...  ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்க கேஸ் இணைப்பு முகவர்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மாவட்ட வருவாய் அலுவலரால் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். கூட்டத்தின் போது, நுகர்வோர்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தால் உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
  ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தத் தேதியில் கூட்டம் நடத்தப்படும் என்ற விவரம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படும். கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்வார்'' என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
  அதிகாரிகள் உறுதி...  ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ""கடந்த நிதியாண்டில் வழங்க வேண்டிய கேஸ் இணைப்புகள் அனைத்தும் நவம்பர் 15-ம் தேதிக்குள் அளிக்கப்படும். மேலும், "இண்டேன்' இணைப்பு வைத்திருப்பவர்கள் 155233 என்ற எண்ணிலும், பாரத் கேஸ் நிறுவனத்தின் நுகர்வோர்கள் 26215575 என்ற எண்ணிலும், இந்துஸ்தான் கேஸ் நிறுவன இணைப்பு வைத்திருப்பவர்கள் 28415153 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்'' என தெரிவித்தனர்.

இந்த ஆண்டுக்கு எவ்வளவு?

நடப்பு நிதியாண்டுக்கு 8 லட்சம் கேஸ் இணைப்புகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  ""கடந்த நிதியாண்டில் தர வேண்டிய இணைப்புகளில் 2 லட்சம் பாக்கி உள்ளன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் 6 லட்சம் கேஸ் இணைப்புகளைக் கேட்டுப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக, இந்த நிதியாண்டில் 8 லட்சம் இணைப்புகளைப் பெற மத்திய அரசிடம் கோரி வருகிறோம்'' என்றார் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்