Saturday, July 31, 2010 4:15 AM IST
Click
தமிழகம்
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏன்? கருணாநிதி விளக்கம்

First Published : 22 Oct 2009 12:35:23 AM IST

Last Updated : 22 Oct 2009 03:54:06 AM IST

சென்னை, அக். 21 ""தமிழகத்தில் 2011-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற இருக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
  இதன் காரணமாகவே, 2011-ல் மாநாட்டை நடத்தலாம் என்ற உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் யோசனையை ஏற்க முடியவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பை, அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறப்பட்டது.
  இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""உலகத்தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்' தான் என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  அவரது ஆட்சியில் தஞ்சையில் நடத்திய எட்டாவது உலகத் தமிழ் மாநாடு எந்த வகையிலும் முன்மாதிரியாக அமைந்திடவில்லை. எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994-ல் தமிழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 1995-ம் ஆண்டு ஜனவரியில்தான் மாநாடு நடத்தப்பட்டது.
  எட்டாம் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட அறிவிப்பு தன்னிச்சையான அறிவிப்பே தவிர, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் அறிவிக்கவில்லை.
  தேர்தல் காரணமாக...  மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள கட்டுரைகளைத் தயாரித்திட ஆய்வாளர்களுக்குப் போதிய கால அவகாசம் தேவைப்படும் என்வும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விடுமுறைக் காலம் ஜூன் - ஜூலையில் அமைகிறது என்பதாலும் 2010 ஜனவரிக்குப் பதிலாக, ஜூன் - ஜூலையில் நடத்தலாம் என்ற தமிழறிஞர்கள், ஆய்வாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
  "தமிழகத்தில் மாநாட்டினை 2011 ஜனவரியில் நடத்தலாம்' என்று உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ள நொபுரு கரஷிமா கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால், அவரது கருத்தினை ஏற்றுச் செயல்படுவதில் பிரச்னைகள் உள்ளன.
  உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு, உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பொறுப்புகளில் உள்ள 9 பேரில் 6 பேர் இசைவு அளித்துள்ளனர்.
  14 ஆண்டுகளுக்குப் பிறகு... 1995-க்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடைபெறவில்லையே என்ற குறையைத் துடைக்கவும்; அண்மைக்கால தொல்லியில், வரலாற்றியல், மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்; உலகளாவிய நிலையில் தமிழ் மொழி இலக்கியப் பண்பாடு தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பதற்கும், அவர்கள் அனைவரும் ஓரிடத்திலே கூடிச் சிந்திக்கவும் வசதியாக இந்த மாநாட்டை நடத்த தமிழக அரசு முன்வந்திருக்கிறது.
  அரசியல் உள்நோக்கம் இல்லை... மாநாட்டை நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆய்வு, தமிழ் அறிஞர்கள் தொடர்பானவற்றில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றவர்கள் முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்