நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க. வலியுறுத்தல்
First Published : 29 Oct 2009 01:19:11 AM IST
Last Updated :
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சசிகலா உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்.
சென்னை, அக். 28: நதி நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. சென்னை அருகே வானகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சி பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தால் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் வளம் பெறுவதோடு மட்டுமல்லாமல், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும். இந்தியாவின் பல மாநிலங்களில் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம், சில மாநிலங்களில் அளவு கடந்த நதி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்நிலையில், அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவும், நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீரவும், நதி நீர் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம். ஜெயலலிதா தலைமையில் அமையவிருக்கும் அ.தி.மு.க. அரசு நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.இலங்கைப் பிரச்னை: இலங்கையில் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்து, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை முதல்வர் கருணாநிதி அன்றே வாபஸ் பெற்றிருந்தால், அப்பாவி இலங்கைத் தமிழர்களை மரணத்தின் பிடியிலிருந்து விடுவித்திருக்கலாம். ஆனால் கருணாநிதி இதைச் செய்யவில்லை. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்பிரச்னையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கபட நாடகங்களை நிறைவேற்றி மக்களை ஏமாற்றிய கருணாநிதிக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.செம்மொழி மாநாடு: ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என கருணாநிதி அறிவித்தார். உலகமெங்கும் தமிழர்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் மாநாடு நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கமும் இதே கருத்தை தெரிவித்து, மாநாடு நடத்த அனுமதி மறுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை இப்போது கருணாநிதி அறிவித்திருக்கிறார். மக்கள் பணத்தை வீணடித்து, தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, தன்னல மாநாட்டை நடத்தும் முதல்வர் கருணாநிதிக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம்; முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், அதைத் தடுத்து நிறுத்தாத தி.மு.க. அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.