Saturday, July 31, 2010 4:16 AM IST
Click
தமிழகம்
பழி கூறுவோர் பற்றிக் கவலை வேண்டாம்: கருணாநிதி

First Published : 12 Nov 2009 12:48:59 AM IST

Last Updated : 12 Nov 2009 01:08:52 AM IST

சென்னை, நவ. 11:  ""வெள்ள நிவாரணப் பணிகளில் திமுக அரசு மீது பழி கூறுவோர் பற்றிக் கவலைப்படாமல், துயர்படும் மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
  ""தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட ம்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதே தவிர, நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு திமுக அரசு மீது சொல்லப்பட்டுள்ளது.
  புயல், வெள்ளம், வறட்சி, சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நேரும்போது கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் நல்வாழ்வு கருதி, அவர்தம் துயர் துடைக்க வேண்டும்.
  இதில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபடுவதுதான் மனித இயல்பு. அதுதான் நேரம் எனக் கருதிக் கொண்டு ஆளுங்கட்சியைக் குறை கூறுவதிலும் அதிலே இன்பம் காண்பதிலும் நேரத்தைச் செலவிடக் கூடாது.
  கட்சி சாராமல்...  தமிழகத்தில் திமுக எதிர்க் கட்சியாக இருந்த நிலையில், அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுக்காக அகமகிழ்ந்து ஆளுங்கட்சியின் மீது பழி தூற்றவில்லை.
  அண்ணா எந்த அளவுக்குப் பெருமையோடு முதல்வர் காமராஜரைப் பாராட்டி எழுதியிருக்கிறார் என்பதையும், திமுகவினரும் கட்சி வேறுபாடு கருதாமல் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறே திமுகவினர் காங்கிரஸ் ஆட்சியுடன் ஒத்துழைத்து துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
  இப்போதைய நிலைமை...  அதிமுக ஆட்சியில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அனைவருக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படாத நிலை இருப்பதைப் போலவும் அறிக்கை விடுத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
  அதில், பெருமைப்பட ஒன்றுமில்லை. ஓர் அரசு செய்ய வேண்டிய கடமைதான் அது. என்றாலும் அப்போது அந்த ரூ. 2 ஆயிரம் எப்படி, எதற்காகக் கொடுக்கப்பட்டது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
  சென்னை மாநகரில் பல மாடிக் கட்டடங்களில் உயர்ந்த இடங்களில் மழையினால் சிறிதளவு கூட பாதிக்காதவர்களுக்கு எல்லாம் அப்போது ரூ. 2 ஆயிரம் வீதம் அந்தத் தொகை வழங்கப்பட்டது.
  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதை விட, திமுக ஆட்சியில் கூடுதலாக நிவாரணமும், நிவாரணத் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  எனவே, நம்மைப் பற்றியும் திமுக அரசைப் பற்றியும் குறை கூறுவோரைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காக தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
  "போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற மொழிக்கு இணங்க, யார் என்ன சொன்ன போதிலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நமது பணிகளைத் தொடருவோம். மக்கள் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்