சென்னை, நவ. 14: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எம்.எட். தொழில்நுட்பம் படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பின் முதலாமாண்டை பி.எட். பட்டப் படிப்புக்கு இணையாகக் கருத முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளை இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பப் பாடங்களை படித்தவர்களும் எழுதி வருகின்றார்கள்.
இதில், அரசுப் பணியாளர் தேர்வுகளை, தொழில் நுட்பப் படிப்பான வேளாண்மை துறை பட்டதாரிகளும் எழுதலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ஒரே நிலையாகக் கருத... இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தான் நடத்தி வரும் எம்.எட். தொழில்நுட்பம் (செமஸ்டர் முறை) படிப்பு தொடர்பாக அரசுக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
"அரசு பணியாளர் தேர்வுகளை எழுத விரும்பும் எம்.எட். தொழில்நுட்பம் முதலாமாண்டு மாணவர்களை, பி.எட். பட்டப் படிப்புக்கு இணையாகக் கருத வேண்டும்' என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்தக் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை அரசு கோரியது.
தேர்வாணையம் அளித்த பதிலில், ""மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கை தொடர்பாக, ஆணையத்தின் கமிட்டி கூடி விவாதித்தது. அதில், அரசுப் பணியாளர் தேர்வுகளின் போது, எம்.எட். தொழில்நுட்பப் படிப்பை பி.எட். - க்கு இணையாகக் கருத முடியாது'' என்று கூறியுள்ளது.
தேர்வாணையத்தின் இந்த முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு, அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.