நவம்பரில் இந்தியா வருகிறார் ஆஸ்திரேலியப் பிரதமர்
First Published : 09 Sep 2009 11:27:00 PM IST
Last Updated :
மெல்போர்ன், செப். 8: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் நவம்பரில் இந்தியா வருகிறார். சிங்கப்பூரில் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நவம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே இந்தியாவுக்கு கெவின் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் அங்குள்ள தனியார் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடு போன்றவை ஆஸ்திரேலியா பற்றி இந்தியாவில் தவறான கண்ணோட்டம் ஏற்பட வழி வகுத்து விட்டது. ஒரு மாத இடைவெளியில் சுமார் 22 இந்திய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த பிரச்னைகளால் இருதரப்பு உறவு சீர்குலையுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம் ஏற்படாமல் இல்லை. இந்நிலையில், பிரதமர் கெவின் ரூட் நவம்பரில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளார் வர்த்தகத்துறை அமைச்சர் சைமன் க்ரீன். அவர் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மாணவர்கள் தாக்கப்படும் விவகாரத்துக்கு முடிவு காண தீவிரமாக இறங்கியுள்ளார் பிரதமர் கெவின். எனினும் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்கள் சிலர் அதையே குறுக்குவழியாக கொண்டு ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக தங்கிவிட முயற்சிக்கின்றனர். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தரமான கல்வி கொடுப்பதை நாங்கள் செய்கிறோம். மற்றபடி கல்வி கற்கவந்து அதன் மூலமாக நிரந்தரமாக தங்குவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் குறுக்கு வழிகளை ஏற்கமாட்டோம். இதை இந்தியாவும் புரிந்து கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுமார் 95 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த இடத்தை பிடிப்பது இந்தியாதான் என்றார் க்ரீன்.