இந்திய உள்நாட்டுத் தேவை பொருளாதார நெருக்கடியிலிருந்து காத்தது: பிரணாப் முகர்ஜி
First Published : 16 Nov 2009 12:46:00 AM IST
Last Updated :
கொழும்பு, நவ. 15: இந்திய உள்நாட்டுத் தேவை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றியதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி கொழும்பில் சனிக்கிழமை அந்நாட்டு அமைச்சர் மறைந்த லட்சுமண் கதிர்காமர் நினைவு உரையில் பொருளாதார விஷயங்கள் குறித்துப் பேசியது: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையும், அதன் தேவையுமே நெருக்கடி ஏற்படாமல் நாட்டைக் காப்பாற்றியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வளரும் நாடுகள் காரணம் இல்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியால் வளரும் நாடுகளே அதிகம் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் இந்த ஆண்டு காலம் தப்பிய பருவமழையாலும், பல இடங்களில் மழை சரிவர பெய்யாததாலும் உணவு உற்பத்தி குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 2009-10-ல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே வெளிநாடுகளுடனான உறவு அமையும் என்றார் பிரணாப் முகர்ஜி.