ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு இல்லை: நிதீஷ், சரத் யாதவ்
First Published : 11 Mar 2010 05:17:18 AM IST
Last Updated :
பாட்னா/புதுதில்லி, மார்ச் 10: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடையவில்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், கட்சித்தலைவர் சரத் யாதவும் புதன்கிழமை அறிவித்தனர்.மகளிர் மசோதா விவகாரத்தில், அதை மாநிலங்களவையில் ஆதரிப்பது என நிதிஷ் குமார் எடுத்த நிலை சரத் யாதவின் நிலைக்கு மாறானது. மாநிலங்களவையில் இந்த கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சரத் யாதவுக்கு எதிரான நிலை எடுத்த நிதீஷ் குமார் கட்சியில் உள்ளவர்களை அணிதிரட்டி புதிய கட்சி தொடங்குவார் என பத்திரிகைகளில் வந்த செய்தியை இருவரும் மறுத்தனர். தில்லியில் இது தொடர்பாக சரத் யாதவும் பாட்னாவில் நிதீஷ் குமாரும் நிருபர்களிடம் பேசினர்.பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி சரத் யாதவின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. மாநிலங்களவையில் மகளிர் மசோதா தாக்கலான போது அதை ஆதரித்து வாக்களித்தது பாஜக. மசோதாவை ஆதரிப்போம் என்று நிதீஷ் குமாரும் அறிவித்தார்.தலித்துகள், முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடுக்கு வகை செய்ய வேண்டும் என கோரி வருகிறார் சரத் யாதவ்.இருவரின் மோதலால் கட்சி பிளவுபடுகிறது என்று செய்திகள் வெளியாகின.இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய நிதீஷ்குமார் மகளிர் மசோதாவை ஆதரிப்பது என்ற பிரச்னையால் கட்சி உடையாது. கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் சகஜம். இது கட்சியில் பிளவு ஏற்படுத்தாது என்றார். பிகாரில் இந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் கட்டுக்கோப்பு கலைவதை கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை என்பதையே இவர்களின் பேட்டி உணர்த்துகிறது.