தேவைப்பட்டால் ஆண்களுக்கும் இடஒதுக்கீடு: சோனியா காந்தி
First Published : 11 Mar 2010 05:06:51 AM IST
Last Updated :
புது தில்லி, மார்ச் 10: தேவைப்பட்டால் மக்களவை, சட்டப் பேரவைகளில் ஆண்களுக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும் என்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. மக்களவையில் புதன்கிழமை மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினருக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவருமான கல்யாண் பானர்ஜி, மக்களவையில் புதன்கிழமை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்துப் பேசினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டால் ஆண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் பட்சத்தில் மக்களவையிலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இடங்களும் பெண்களுக்கே ஒதுக்கப்படும். இதுதவிர, பொதுப் பிரிவிலும் அவர்கள் போட்டியிடுவர். இவ்வாறு போட்டியிடும்போது மொத்த இடங்களில் அதிகமான இடங்களை பெண்களே ஆக்கிரமிக்கும் நிலை உருவாகும் என்றும் கல்யாண் பானர்ஜி குற்றம்சுமத்தினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக கல்யாண் பானர்ஜி, மக்களவையில் சுமார் 20 நிமிடம் இவ்வாறு காரசாரமாக பேசினார். ஒருகட்டத்தில் திடீரென குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் மக்களவையிலும், பேரவைகளிலும் தொடர்ந்து ஆண்களுக்கே அதிக இடங்கள் இருக்கும். ஒருவேளை பெண்கள் இடஒதுக்கீட்டால் ஆண்கள் பாதிக்கப்படும் நிலை உருவானால் அப்போது ஆண்களுக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும் என்று எதார்த்தமாக தெரிவித்தார். சோனியாவின் இந்த பதிலால் மக்களவையில் சிரிப்பலை எழுந்தது. கல்யாண் பானர்ஜியும் தனது காரசாரமான உரையை முடித்துக் கொண்டு அமைதியாக இருக்கையில் அமர்ந்தார்.