வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு அத்வானி ஆதரவு
First Published : 11 Mar 2010 05:09:46 AM IST
Last Updated :
11 Mar 2010 10:50:43 AM IST
புது தில்லி, மார்ச் 10: தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து விவரம்:தேர்தலில் வாக்களிப்போரின் சதவீதத்தைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது படிக்காதவர்களை விட படித்தவர்களின் சதவீதம் மிக மிகக் குறைவாக உள்ளது. ஒவ்வொரு பிரிவினராக கணக்கெடுத்துப் பார்த்தால் படித்தவர்கள் வாக்களிக்கும் சதவீதம் குறைவாக இருக்கும். பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ஆகியோரின் வாக்களிப்பு விகிதம் எவ்வளவு மாறுபடுகிறது என்பது தெளிவாகப் புரியும். அதேசமயம் ஏழை மக்களின் வாக்களிப்பு சதவீதம் அதிகமாக இருப்பதையும் பார்க்கலாம். இத்தகைய நிலை ஜனநாயக அமைப்பின் தரத்தை மிகவும் குறைத்துவிடும். இதற்கு வாக்களிப்பதை கட்டாயமாக்குவது ஒன்றே சிறந்த தீர்வாகும்.தற்போது உள்ள முறையை மாற்ற வேண்டும் என்பதே எனது அபிப்ராயம். இந்த விஷயத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. குஜராத் மாநிலத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளார். ஆனால் அது இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர்க்கு தேர்தலில் வாக்களிப்பது 25 நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதே தெரியவில்லை. இந்நாடுகளில் உள்ள 70 கோடி மக்கள் கட்டாயம் வாக்களிக்கின்றனர். இதில் ஆஸ்திரேலியா,ஆர்ஜென்டீனா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, துருக்கி,தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் அடங்கும். இந்த விஷயத்தை நமது அரசியல்வாதிகளும், தலைவர்களும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்றே கருதுகிறேன்.இதேபோல கனடா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாக்களிப்போரின் சதவீதம் குறைந்து வருவது குறித்து அந்நாடுகள் கவலை தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இத்தகைய சூழலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றுதான் இதற்கு மாற்றாக அமையும். இந்தியாவில் தேர்தலின்போது பணபலம் பயன்படுத்தப்படுவதற்கு சிறந்த மாற்றாக கட்டாய வாக்களிப்பு சட்டம்தான் தீர்வாக இருக்கும் என்று இந்திய தேர்தல் முறை குறித்த ஆய்வில் பிரிட்டன் தெரிவித்துள்ளதையும் அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.