ஃபோர்டு ஃபிகோ தில்லியில் அறிமுகம்
First Published : 10 Mar 2010 02:05:06 AM IST
Last Updated :
தில்லியில் ஃபோர்டு நிறுவனத்தின் சிறிய ரக "ஃபிகோ' காரை அறிமுகப்படுத்தும் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக்கேல் போன்ஹாம் (இடது) மற்றும் துணைத் தலைவர் ஜோ ஹின
புது தில்லி, மார்ச் 9: சிறிய ரகக் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் முதல் முறையாக ஃபிகோ எனும் சிறிய ரகக் காரை தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.÷இந்தக் கார் அறிமுக விழாவில் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக்கேல் போன்ஹாம் கூறியது: சர்வதேச அளவில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஃபிகோ கார்கள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிறிய ரகக் கார்களாக சந்தையில் வலம் வரும் மாருதி ஸ்விப்ட், ஹூன்டாய் ஐ20 மற்றும் வோக்ஸ்வாகன் சமீபத்தில் அறிமுகப்படுத்திய போலோ கார்களுக்குப் போட்டியாக இது வெளிவந்துள்ளது. ÷இந்தியாவில் சிறிய ரகக் கார்களின் விற்பனைச் சந்தை 70 சதவீதமாக உள்ளது. இதில் தடம் பதிக்கும் முயற்சியில் ஃபோர்டு நிறுவனமும் சிறிய ரகக் கார்களைத் தயாரித்துள்ளது.÷ சிறிய ரகக் கார் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் ஆண்டுதோறும் அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு புதிய ரகக் காரை அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.÷இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலும், இந்திய வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையிலும் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.÷சென்னை மறைமலை நகரில் உள்ள ஆலையில் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.÷இதுவரை, பெரிய ரகக் கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்தது ஃபோர்டு. இந்த கார்களுக்கான விற்பனை சந்தை வெறும் 20 சதவீதம் மட்டுமே. தற்போது ஃபிகோ கார் அறிமுகம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ரக சொகுசு கார் குறைந்த விலையில் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.÷இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், இந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். பின்னர் படிப்படியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இவை தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெட்ரோல் காரின் விலை ரூ. 3.5 லட்சமாகும். டீசல் ரகக் காரின் விலை ரூ. 4.5 லட்சமாகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15.6 கி.மீ. தூரமும், ஒரு லிட்டர் டீசலுக்கு 20 கி.மீ. தூரமும் ஓடக்கூடியது.சிறிய ரகக் கார் தயாரிக்கும் முடிவை இந்நிறுவனம் 2007-ம் ஆண்டு எடுத்தது. இதற்காக மறைமலை நகரில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரிவாக்க ஆலையை கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார் என்று போன்ஹாம் குறிப்பிட்டார்.