அக்டோபர் 23-ல் இயக்குநர் சங்க ஆண்டு விழா
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 30: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா, அக்டோபர் 23-ம் தேதி சென்னையில் கொண்டாடப்படுகிறது.இது குறித்து இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் தனது 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை பிரமாண்டமான முறையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சாதனை படைத்த, சாதனை படைத்துக் கொண்டிருக்கிற இந்தியாவின் அனைத்து மொழி இயக்குநர்களும் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை வாழ்த்துகிறார்கள். இயக்குநர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. இந்திய அளவில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். பல மொழி இயக்குநர்கள் பங்கு பெறும் கருத்தரங்கம், பட்டி மன்றம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஃபெப்ஸி, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரை அமைப்புகளின் ஆதரவைக் கோரி இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த தீர்மானித்து இருக்கிறோம். சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாக்யராஜ், எஸ்.பி.ஜனநாதன், எஸ்.ஏ.சந்திரசேகரன், தரணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.