அமைச்சர்களிடம் பா.ஜ.க. கவுன்சிலர் கோரிக்கை மனு
First Published : 31 Jul 2010 12:13:46 PM IST
Last Updated :
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 30: ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாரதீய ஜனதா கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் பி.கே.ராமசாமி நேரில் சந்தித்து தனது வார்டு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தார். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.நகர்மன்ற உறுப்பினர் பி.கே.ராமசாமி அளித்த மனுவின் விவரம்: 26-வது வார்டில் குடிநீர்ப் பிரச்னை அதிகமாக உள்ளது. நீர் தேக்கி வைத்து விநியோகம் செய்யப் பயன்படும் 4 சின்டெக்ஸ் தொட்டிகள் கடந்த 6 மாதங்களாகப் பழுதாகியுள்ளன. பலமுறை இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள், நகர்மன்றத் தலைவர் ஆகியோரை பொதுமக்களுடன் நேரில் சென்று முறையிட்டும் பயனில்லை. பொது மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் இதனை சீர்செய்து தர வேண்டும்.மேலும் வறட்சியைக் கருத்தில் கொண்டு இப் பகுதியில் கூடுதலாக இரு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் போதிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சுகாதார சீர்கேடு நிறைந்து தொற்று நோய்கள் பரவும் அபாயகரமான நிலையுள்ளது. கூடுதல் சுகாதாரப் பணியாளர்களை நியமித்து, இப் பணி தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மாத்திரைகள் சாப்பிட மற்றும் குடிக்க, கொதிக்க வைத்து ஆற வைத்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் திருமுக்குளம் சிதிலமடைந்து உள்ளது. இதைச் செப்பனிட வேண்டும். மேலும் நகர்மன்ற திரு.வி.க. உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி இப் பகுதி அனைத்து ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.