அரசுக் கல்லூரி கட்டடப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
First Published : 09 Feb 2010 08:21:14 AM IST
Last Updated :
09 Feb 2010 09:56:56 AM IST
குளித்தலை, பிப்.8: குளித்தலை அரசு கலைக் கல்லூரி கட்டடப் பணிகளை குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் இரா. மாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (படம்) கரூர் மாவட்டம், குளித்தலையில் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி (சட்டமன்ற பொன்விழா) கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரிக்கு தேவையான கட்டட வசதிகள் இல்லாததால், குளித்தலை காவிரி நகரிலுள்ள அண்ணா சமுதாய மன்றத்தில் தாற்காலிகமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட அய்யர்மலையில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என குளித்தலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, அய்யர்மலையில் 8.980 ஹெக்டேர் நிலத்தில் ரூ. 2.84 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன. தற்போது, கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் தரைத்தளத்தில் 12 வகுப்பறைகள், 1 முதல்வர் அறை, 1 அலுவலக அறை, துறைத்தலைவர்கள் அறைகள், ஆய்வக அறை, கணினி அறை, நூலக அறை, பேராசிரியர்கள் ஓய்வு அறை ஆகியவற்றை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் இரா.மாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் கட்டட பணிகள் விரைவில் நிறைவுப் பெறும். வரும் கல்வியாண்டு முதல் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றார் அவர். எம்எல்ஏவின் இந்த ஆய்வின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.சிவராமன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மு.கந்தசாமி, குழு உறுப்பினர் செல்வம், சத்தியமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் எம். பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.