அரையிறுதி வாய்ப்பை இழந்தது தென் கொரியா: நெதர்லாந்தை 2-1 என வீழ்த்தியது
First Published : 10 Mar 2010 02:36:31 AM IST
Last Updated :
கொரிய வீரரிடமிருந்து பந்தை பறிக்க முயலுகிறார் நெதர்லாந்து வீரர் ஜான் கீர்ட் டெர்ரிக்.
புது தில்லி, மார்ச் 9: தில்லியில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து அணிக்கு 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அதிர்ச்சித் தோல்வியை ஏற்படுத்தியது. எனினும் இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளதால் நூலிழையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை கொரியா இழந்தது."ஏ' பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவும், நெதர்லாந்தும் மோதின. போட்டி தொடங்கிய 25வது நொடியிலேயே நெதர்லாந்து வீரர் பிரெüவர் முதல் கோலை அடித்து கொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.பின்னர் சுதாரித்துக்கொண்ட கொரிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். 31-வது நிமிடத்தில் வுன் வூ நாம் பெனால்டி மூலம் கோல் அடித்து சமன் செய்தார். இதைத் தொடர்ந்து முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.பின்னர் இரண்டாவது பாதியில் தென் கொரிய வீரர் ஹோ சியோ 2வது கோலை அடித்து முன்னிலைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் போட எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீணாயின. முடிவில் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தது.எனினும் நெதர்லாந்து 3 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது நெதர்லாந்து.