இந்துக்களுக்கு சமநீதியும், சம நிதியும் கிடைக்கும் வரை போராட்டம்: பாஜக
First Published : 31 Jul 2010 12:28:47 PM IST
Last Updated :
ராமநாதபுரம்,ஜூலை 30: இந்துக்களுக்கு சம நீதி, சம நிதி கிடைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும் என, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார். ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஹெச்.ராஜா பேசியது: வங்கிகளில் வழங்கப்படும் தொழில் கடன்களுக்கு இந்துக்களிடம் அதிக வட்டியும், சிறுபான்மை இனத்தவரிடம் குறைந்த வட்டியும் வசூலிக்கப்படுகிறது. இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடையாது. சிறுபான்மையினருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்குவதில் நியாயமில்லை. பெரும்பான்மையாக உள்ள இந்து சமுதாயத்திற்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மறுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதத்திலும் வறுமையால் நிதி வசதியின்றி படிக்க இயலாத மாணவர்கள் உள்ளனர். சிறுபான்மையினர் புதிதாகக் கல்வி நிலையங்களைத் தொடங்கினால் அரசு அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. நிறுவனங்களைத் தொடங்கிவிட்டு தகவல் அளித்தாலே போதும். அவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பயில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தை மாற்றுவோம். சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக உதவித்தொகை வழங்கப்படும். சனிக்கிழமை திண்டுக்கல்லிலும், பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசித்து, இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது குறித்து அறிவிக்க இருக்கிறோம் என்றார் ஹெச். ராஜா. முன்னதாக, ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக் குழுத் தலைவர் ஜி.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சண்முகராஜ்,மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் துரை.கண்ணன்,சுடலைமாடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ராமசேகர்,கோட்டப் பொறுப்பாளர் சொக்கலிங்கம்,தேசியச் செயற்குழு உறுப்பினர் முரளீதரன்,மாநிலப் பொதுச் செயலாளர் சுப. நாகராஜன் மற்றும் சோலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.