இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்
First Published : 08 Feb 2010 10:05:58 AM IST
Last Updated :
08 Feb 2010 10:43:11 AM IST
திண்டுக்கல், பிப். 7: இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, திண்டுக்கல் - திருச்சி சாலையில் சனிக்கிழமை மாலை விவசாயிகள் பேரணியும், இதைத் தொடர்ந்து கருத்தரங்கமும் நடைபெற்றது. கடந்த 60 ஆண்டு கால அளவில் உலக விவசாய, பொருளாதாரத்தில் ரசாயன விவசாயம் வேரூன்றி விட்டதைத் தொடர்ந்து, எதிர் விளைவுகளை வெளிப்படையாக உணரும் நிலை உருவாகி உள்ளது. ரசாயன விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தை நலிவடையச் செய்வதும், விளை நிலங்களில் உள்ள உயிரினங்களை அழித்தல், நிலத்தடி நீர் மாசுபடுதல், உட்கொள்ளும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை அதிகரித்தல் போன்ற தீய விளைவுகள் உருவாகி வருகின்றன. எனவே, மீண்டும் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, திண்டுக்கல் இயற்கை வேளாண் இந்தியா சார்பில் விவசாயப் பேரணி திருச்சி சாலையில் நடைபெற்றது. பேரணியில், மாட்டு வண்டியில் உரல், அம்மி, உலக்கை போன்ற இயற்கை உணவுப் பழக்கவழக்கத்தை வலியுறுத்தும் வகையில் காட்சிப் பொருள்கள் எடுத்து வரப்பட்டன. இப்பேரணியை, தமிழ்நாடு கல்லுடைப்போர் சங்க நிறுவனத் தலைவர் எஸ்.பி. ஞானமணி, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் என். அர்த்தநாரி தொடங்கி வைத்தனர். பின்னர் நடைபெற்ற கருத்தரங்குக்கு, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி. பங்கஜம் தலைமை வகித்துப் பேசினார். இயற்கை வேளாண் இந்தியா மண்டல அமைப்பாளர் ஏ. கிரிகோரி முன்னிலை வகித்தார். தமிழகம், புதுச்சேரி இயற்கை வேளாண் இந்தியாவின் தலைவர் பரிசுத்தம் ஜான்பிரிட்டோ துவக்க உரையாற்றினார். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை பேராசிரியர் டி.டி. ரெங்கநாதன் கருத்துரையாற்றினார். முன்னதாக, இயற்கை வேளாண் மண்டல அமைப்பாளர் ஜி.எப். விசுவாசம் வரவேற்றார். துணைச் செயலர் பி.எஸ். போஸ் நன்றி கூறினார்.