இயற்கைப் பேரழிவைத் தவிர்க்க முடியும்: 'இஸ்ரோ' விஞ்ஞானி
First Published : 11 Mar 2010 10:00:30 AM IST
Last Updated :
11 Mar 2010 10:36:05 AM IST
தஞ்சாவூர், மார்ச் 10: செயற்கை கோள் தொலை உணர்வு போன்ற உயர் தகவல் தொழில் நுட்ப உதவியால் இயற்கைப் பேரழிவுகளைத் தவிர்க்க முடியும் என்றார் ஐதராபாத் "இஸ்ரோ' தேசிய தொலை உணர்வு மையத் தலைமை விஞ்ஞானி எஸ்.கே. சுப்பிரமணியன்.பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி இரு நாள் நடைபெற்ற இயற்கை பேரிடர் தடுப்பு மறறும் நீர் ஆதாரத்தை அறிவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்க நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:""இந்தியா நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரழிவுகள் அதிகம் பாதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. பேரழிவு நிகழும்போது உயிரிழப்பும் பொருளாதார இழப்பும் பெருமளவில் ஏற்படுகிறது.தற்போது செயற்கைகோள் தொலை உணர்வு போன்ற நவீன தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு, நிலநடுக்கத்தைத் தவிர சுனாமி, புயல் போன்றவை நிகழ்வதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே அறிந்துவிட முடியும்.அப்படி கிடைக்கும் தகவலை 2 மணி நேரத்துக்கு முன்னதாக பிரதமர் அலுவலகத்துக்கும், 4 மணி நேரத்துக்கு முன்னதாக குறிப்பிட்ட பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அளிக்கப்படும். அந்த அவகாசத்தில், அப்பகுதியில் உள்ள மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியை மாவட்ட நிர்வாகம் எடுக்க முடியும்.வட மாநிலத்தில் ஓடும் கோசி ஆற்றிலும், ஆந்திர மாநிலம் கர்ணூலிலும் 2008-ல் பெரும் வெள்ளம் ஏற்படப்போகிறது என்பதை தொலை உணர் தொழில் நுட்ப உதவியால் முன்னரே அறிந்து தகவல் அளித்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இத்தகைய தகவல் பரிமாற்றம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகள் நிலச்சரிவு, பனிப்புயலும், அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலை மைமாகக் கொண்ட சுமார் 8,000 கி.மீ. நீண்ட கடற்கரையில் புயல் போன்ற பேரழிவுகள் அதிகம் நிகழும் பகுதிகளாக உள்ளன.அதேபோல, நாட்டின் மத்திய பகுதியில் வறட்சி, மழைக் குறைவு போன்றவையும் பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. தொலை உணர் தொழில்நுட்பம் மூலம் இதையும் முன்னரே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். கிணறு, ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு, அவ்விடத்தில் தண்ணீர் உள்ளதா என்பதையும் இத்தொழில்நுட்ப உதவியால் அறிய முடியும். சரியான முன்னெச்சரிக்கை அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் தொலை உணர் தகவல் தொழில்நுட்பத்தை முறையாகக் கையாள்வதன் மூலமும் இது போன்ற பேரழிவை முன்னரே கண்டறிந்து அதைத் தவிர்க்க முடியும்'' என்றார் சுப்பிரமணியன்.கருத்தரங்கில், துணைவேந்தர் நல். ராமச்சந்திரன், முதன்மை ஆராய்ச்சியாளர் டி. குமார் உள்ளிட்டோர் பேசினர்.பேராசிரியர் டி.பி. மணி தலைமை வகித்தார். மாணவி எல். கிருத்திகா வரவேற்றார். பி. இளங்கவின் நன்றி கூறினார்.