Saturday, July 31, 2010 4:18 AM IST
Click
விளையாட்டு
உலகக் கோப்பை ஹாக்கி: இன்று அரையிறுதிப் போட்டிகள்

First Published : 11 Mar 2010 04:37:13 AM IST

Last Updated : 11 Mar 2010 08:18:33 PM IST

புது தில்லி, மார்ச் 10: தில்லியில் நடைபெற்றுவரும் 12வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

மாலை 6.05 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன.

இதுவரை நடந்து முடிந்த முதல் சுற்று ஆட்டங்களில் ஒரு போட்டியிலும் தோல்வி பெறாத அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. இந்த அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் டிராவும் பெற்று "ஏ' பிரிவில் 11 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனியை எதிர்த்து விளையாட உள்ள  இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்று 12 புள்ளிகளுடன் "பி' பிரிவு பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஜெர்மனி போராடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அந்த அணியில் மூத்த அனுபவ வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. ஏறக்குறைய பெரும்பாலானோர் புதுமுகங்களே. இருப்பினும் இளம் வீரர்களை கொண்ட அந்த அணி சிறப்பாக விளையாடி மொத்தம் 19 கோல்களை அடித்துள்ளது பெருமைக்குரிய விஷயம்தான். போட்டி தொடங்குவதற்கு முன் அதன் பயிற்சியாளர் கூறும்போது, அணியில் அனுபவ வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் அரையிறுதி வரை கட்டாயம் முன்னேறுவோம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அந்த அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது. எனினும் அதை எதிர்த்து விளையாட உள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் முழு தகுதியுடன் இருப்பதால் முதல்முறையாக பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். அதற்கேற்றாற்போல் இங்கிலாந்து வீரர்கள் முதல் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.

உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி இதுவரை ஒருமுறைகூட பெறவில்லை. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் இறுதிப் போட்டி வரை வந்து பட்டத்தை இழந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. எனவே இந்த முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அந்த அணியின் ஆதங்கம்.

இரண்டாவது அரையிறுதி: இரண்டாவது அரையிறுதியில் விளையாட உள்ள ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் மீண்டும் ஒரு முறை பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உள்ளன.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ஆஸ்திரேலியா இந்த முறை அரையிறுதி வரை வந்துவிட்டது. எனவே நெதர்லாந்தை வீழ்த்துவது அவ்வளவு கடினம் அல்ல என்று அந்த அணி வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடந்த முதல் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி மிக அதிகபட்சமாக 23 கோல்களை அடித்துள்ளது. அதேசமயம் பெற்ற கோல்களும் மிகக் குறைவே. எனவே அந்த அணி இறுதிப் போட்டிக்கு நுழைவதில் சிரமம் இருக்காது எனத் தெரிகிறது.

நெதர்லாந்து அணி இதுவரை மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. நான்காவது முறையாக பட்டத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் நெதர்லாந்து அணி ஆட்ட நுணுக்கங்களை மாற்றியாக வேண்டும். அதுவும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டுமெனில் அந்த அணி புதிய உத்திகளை கையாள வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழையும் கனவு நனவாகும்.

11வது இடத்துக்கான போட்டி: இதற்கிடையே 11 மற்றும் 12வது இடத்துக்கான போட்டிக்காக கனடாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் கனடா தோல்வியையே தழுவியது. பாகிஸ்தானும் சொல்லும்படியாக விளையாடவில்லை. அணி வீரர்கள் பல பெனால்டி கார்னர்களை வீணாக்கினர். அணியில் ஒருங்கிணைப்பு இல்லாததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. எனவே கடைசி இடத்தை தவிர்க்க கனடாவுடனான ஆட்டத்தில் வென்றாலே பாகிஸ்தானுக்கு பெருமைதான்.

இன்றைய ஆட்டங்கள்

11 மற்றும் 12வது இடங்களுக்கான போட்டி:

மாலை 3.35 -  கனடா - பாகிஸ்தான்

முதல் அரையிறுதி:

மாலை 6.05 -  ஜெர்மனி  - இங்கிலாந்து

இரண்டாவது அரையிறுதி:

இரவு 8.35 -   ஆஸ்திரேலியா - நெதர்லாந்து

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்