என்எம்டிசி பங்குகளுக்கு 25 சதவீத தள்ளுபடி
First Published : 10 Mar 2010 02:03:46 AM IST
Last Updated :
சென்னை, மார்ச் 9: மத்திய அரசு நிறுவனமான தேசிய கனிம நிறுவனத்தின் (என்எம்டிசி) பங்கு வெளியீடு புதன்கிழமை தொடங்குகிறது. இந்தப் பங்குகளின் விலையில் 25 சதவீத தள்ளுபடி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி இந்நிறுவனப் பங்கு விலை ரூ. 300 முதல் ரூ. 350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.என்எம்டிசி நிறுவனப் பங்கு விலை ரூ. 400 ஆக இருந்தது. தற்போது 25 சதவீத தள்ளுபடியில் பங்கு விற்பனை புதன்கிழமை தொடங்குவதாக நிறுவனத்தின் நிதித்துறை பொதுமேலாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.எஃப்பிஓ எனப்படும் கூடுதல் பங்கு விற்பனைக்கான விலையை மத்திய அமைச்சரவை குழு தீர்மானித்தது. இப்பங்குகளில் இம்மாதம் 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். நடப்பு நிதி ஆண்டில் அரசு நிறுவனப் பங்கு வெளியீட்டில் கடைசி நிறுவனம் இதுவேயாகும். இதற்கு முன்பு வெளியான என்டிபிசி மற்றும் ஆர்இசி ஆகிய அரசு நிறுவனங்களின் பங்கு விலைகள் மிக அதிகமாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதைக் கருத்தில் கொண்டு தற்போது 25 சதவீத விலைக் குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தையில் என்எம்டிசி பங்குகளின் விலை ரூ. 400 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்கு விலையில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை இந்நிறுவனப் பங்கு விலை 9 சதவீதம் சரிந்து ரூ. 375.65-க்கு விற்பனையானது.இந்நிறுவனத்தில் அரசிடம் உள்ள பங்குகளில் 8.38 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பங்கு விற்பனை மூலம் ரூ. 11,700 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாபம் ஈட்டிய நிறுவனங்களில் என்எம்டிசியும் ஒன்றாகும். நவரத்தின அந்தஸ்தை எட்டிய இந்நிறுவனம் ஒவ்வொன்றும் ரூ. 1 முக மதிப்புள்ள 17,43,300 உரிமப் பங்குகளை ஊழியர்களுக்கு ஒதுக்குகிறது.