Saturday, July 31, 2010 3:56 AM IST
Click
முக்கியச் செய்திகள்
ஓட்டப்பிடாரம் பகுதியில்​ 1503 ஏக்கர் நிலம் மோசடி வழக்கு:​ திமுக பிரமுகர் கைது

First Published : 11 Mar 2010 03:16:25 AM IST

Last Updated : 11 Mar 2010 12:47:01 PM IST

தூத்துக்குடி,​​ மார்ச் 10:​​ தூத்துக்குடி மாவட்டம்,​​ ஓட்டப்பிடாரம் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து 1503 ஏக்கர் நிலங்களை மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரியான விருதுநகர் மாவட்ட தி.மு.க.​ பிரமுகர் ஆறுமுகசாமி ​(52) கைது செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடாரம் வட்டம்,​​ சில்லாங்குளம் வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட சில்லாங்குளம்,​​ ஓம்சரவணாபுரம்,​​ மலைப்பட்டி,​​ பசுவந்தனை,​​ கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏழைத் தொழிலாளர்களுக்குச் சொந்தமான 1503 ஏக்கர் நிலங்களை ஒரு கும்பல் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தனராம்.​ இதில்,​​ 1373 ஏக்கர் நிலங்களை போலி பவர் மற்றும் ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டனராம்.

இறந்தவர்களை கூட வேறு நபர்களை காட்டி உயிரோடு இருப்பதாகக் கூறி இந்த நபர்கள் மோசடி செய்தனராம்.​ மேலும்,​​ போலி குடும்ப அட்டைகளை கூட தயார் செய்திருந்தனராம்.

கடந்த ஆண்டு இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.​ இது தொடர்பாக அந்த பகுதி மக்களோடு,​​ மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது.​ இதைத் தொடர்ந்து போலி பரிவர்த்தனை அனைத்தையும் ரத்து செய்து,​​ மோசடி செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தையும் மீண்டும் உரிமையாளர்களுக்கு மாற்றிக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் கோ.​ பிரகாஷ் நடவடிக்கை எடுத்தார்.

மேலும்,​​ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும்,​​ மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர்.​

அதன்பேரில் இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸôர்

1.9.2009-ல் வழக்கு பதிந்தனர்.​

இந்த வழக்கை மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி.​ சசிகலா நேரடியாக விசாரணை நடத்தினார்.

மொத்தம் 212 பட்டாதாரர்களிடம் 1503 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரித்து,​​ அதில் 1373 ஏக்கர் நிலங்களை கிரையம் செய்திருந்தது தெரிய வந்தது.​ இந்த மோசடியில் கடம்பூர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடம்பூர் சார்பதிவாளர் ​(பொறுப்பு)​ முனியசாமி,​​ ஆவண எழுத்தர் பாலகிருஷ்ணன்,​​ மாப்பிளையூரணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிலோமின்ராஜ் ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸôர் ஏற்கெனவே கைது செய்தனர்.

இந்த மோசடியில் விருதுநகர் மாவட்டம்,​​ ராஜபாளையம் அருகேயுள்ள கிழவிகுளத்தைச் சேர்ந்த ரா.​ ஆறுமுகசாமி ​(52) முக்கிய எதிரி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.​

விருதுநகர் மாவட்ட தி.மு.க.வில் முக்கிய பிரமுகரான இவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸôர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில்,​​ டி.எஸ்.பி.​ சசிகலா,​​ ஆய்வாளர் பெ.​ கிருஷ்ணன்,​​ உதவி ஆய்வாளர் செல்லப்பா மற்றும் போலீஸôர் அடங்கிய குழுவினர்,​​ ஆறுமுகசாமியை செவ்வாய்க்கிழமை கிழவிக்குளத்தில் கைது செய்தனர்.

​ பின்னர்,​​ தூத்துக்குடி நீதித் துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் காவலில் வைக்கப்பட்டார்.​

இந்த வழக்கில் மேலும் சில நபர்களுக்கு தொடர்பு உள்ளது.​ அவர்களையும் தீவிரமாக தேடி வருவதாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸôர் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்