கதர் கிராமத் தொழில்கள் மூலம் தயாரிக்கும் பொருள்களுக்கு கூடுதல் விளம்பரம் அவசியம்
First Published : 10 Mar 2010 11:23:55 AM IST
Last Updated :
விருதுநகர், மார்ச் 9: கதர் கிராமத் தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் குறித்து விளம்பரம் செய்வது முக்கியம் என்று மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் கூறினார். விருதுநகரில் மண்டல நிலையிலான கிராமத் தொழில்கள் குறித்த விழிப்புணர்வு முகாமை அவர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து பேசியது: காதிப் பொருள்களுக்கு மக்களிடையே தனி மதிப்பு உள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்கள் வாழ்க்கைத் தரம் முன்னேற உதவுகிறது கதர் கிராமத் தொழில். காதித் தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் அனைத்தும் தரமானதாகும். குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கிறது. இவற்றை அதிகமானோர் வாங்கிப் பயன்படுத்தும் விதத்தில் விளம்பர உத்திகளை நாம் பின்பற்ற வேண்டும். பொருள்களின் வடிவமைப்பு, பேக்கிங் பிற தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக இருக்க வேண்டும். குறிப்பாக பொருள்களின் வடிவமைப்புக்கு தனி முக்கியத்துவம் தருவது அவசியமாகும். இந்தத் துறையில் பணியாற்றுவோர் ஓயாத உழைப்பு, வெற்றிக்கு வழிவகுக்கும என்றார் ஆட்சியர். இந்த நிகழ்ச்சியில் காதி கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் மோடக் வரவேற்றார். கோட்ட இயக்குநர் வரகோடி, மண்டல இயக்குநர் ஜெயராஜ், வளர்ச்சி அலுவலர்கள் அருள்ராஜ், நீலமேகம் ஆகியோர் பேசினர்.செனனை தரக்கட்டுப்பாடுத் துறை இயக்குநர் கதிர்வேல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராமு, பேராசிரியர் ரமணி ஆகியோர் பேசினர். விருதுநகர் சர்வோதய சங்கச் செயலர் வேலுசாமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ இராஜேஸ்வரி, சர்வோதயச் சங்கச் செயலர்கள், விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கதர் கிராமத் தொழில்கள் உறபத்தி பொருள் கண்காட்சியைப் பார்வையிட்டார் ஆட்சியர்.