கற்ற கல்வியால் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்
First Published : 10 Mar 2010 11:45:50 AM IST
Last Updated :
சிவகங்கை, மார்ச் 9: மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என, சென்னை பல்கலைக்கழகத் துணைவேநதர் ஜி.திருவாசகம் அறிவுறுத்தினார்.சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கல்வி நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: அடிமை வாழ்க்கையில் இருந்து விடுபடவும் தரமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி ஒரு முக்கிய ஆயுதமாகும் என்றார்அம்பேத்கார்.கல்வி இப்போதும் அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்து விடுவதில்லை என்பது ஒன்று. மேலும் கல்வி கற்ற எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை என்பது மற்றொன்று.சாதாரண மக்கள் தங்கள் குழந்தைக்கு உயர்கல்வி வழங்க தங்களால் முடியாது என நினைக்கின்றனர். இதனால் தான் தமிழக அரசு பல்வேறு வழிகளிலும் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க திட்டமிடுகிறது.கல்விக் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கல்வி கிடைக்க வழிவகை செய்துவருகிறது. எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி கற்று தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.வறுமையை கல்வியால் மட்டுமே வெல்லமுடியும். கற்ற கல்வியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள ஒவ்வொரு மாணவரும் முயற்சி செய்ய வேண்டும். தாய்மொழி அறிவுடன் ஆங்கில அறிவையும் வளர்த்துகொள்வது உலக முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும். சுயநம்பிக்கை, கடின உழைப்பு, முடிவு எடுக்கும் திறன் ஆகியவற்றால் லட்சியத்தை அடைய முடியும் என்றார் திருவாசகம்.