கிராமத்து அடையாளம்
First Published : 11 Mar 2010 11:58:34 PM IST
Last Updated :
12 Mar 2010 07:22:20 PM IST
சுனைனா
"பசங்க' பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மு.க.தமிழரசு மகன் அருள்நிதியின் ஜோடியாக நடித்து வருகிறார் சுனேனா. புதுக்கோட்டை மாவட்டப் பின்னணியைக் கொண்ட இப்படம் காதலை மையமாகக் கொண்டது.சுனேனா அளித்த பேட்டி:திடீரென்று கிராமத்து கதைக்கு வந்து விட்டீர்கள்? கிராமத்து சினிமாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து படங்கள் அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதில் ஹீரோவுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறது. ஸ்ரீதேவி, ராதா, ரேவதி என பலரின் அடையாளம் கிராமத்துப் படங்கள்தான். தொடக்கத்தில் கிராமத்துப் படங்கள் செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில்தான் கதை நடக்கிறது. இதுவரை நடித்ததில் இது வித்தியாசமாக இருக்கும்.சில நடிகர்களுடன் இன்றும் சுகிசுக்கப்படுகிறீர்களே? நான் எப்போதும் மீடியா பக்கத்திலேயே இருக்கிறேன். எதைப் பற்றியும் என்னிடம் கேட்டு எழுதலாம். எதற்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதை விட்டு அவர்களாகவே ஏதேதோ எழுதி கொள்கிறார்கள். அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எல்லோரிடமும் நல்ல முறையில் பழகுகிறேன். எதைப் பற்றியும் கேட்டு எழுதுங்கள். காதல், கல்யாணம் என்றால் நானே தெரிவிக்கிறேன்.முன்னணி இடம் இப்போது காலியாக இருப்பது போல் தெரிகிறது...? முதல் இடம், இரண்டாம் இடம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. எனக்குப் பிடித்த சினிமா, கேரக்டர் என தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அந்த சினிமாக்கள் எல்லாம் வெற்றியும் பெறுகிறது. எனக்கென எந்த இடம் எழுதப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் நான் இருப்பேன். அதற்காக குறிப்பிட்ட இடத்துக்கு குறி வைக்கிறேன் என சொல்லி விட முடியாது. அதில் நம்பிக்கை இல்லை. உழைப்புக்கான இடம் எல்லோருக்கும் நிச்சயம் உண்டு."கதிர்வேல்', "யாதுமாகி' என சில படங்களின் ஸ்டில்களில் கிளாமர் அதிகமாக தெரிகிறதே? இரண்டுமே நகரத்துக் கதைகள். "யாதுமாகி' வித்தியாசமான காதல் கதை. பாடல்களில் கொஞ்சம் கிளாமர் இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால்தான் அதுவும். கதைக்கு ஏற்ற கிளாமர் செய்ய ரெடியாக இருக்கிறேன். "யாதுமாகி' விரைவில் ரிலீஸ் ஆகிறது. "கதிர்வேலி'ல் இரண்டு பாடல்கள் மீதம் இருக்கின்றன. பேரரசுவின் இயக்கத்தில் உருவாகி வரும் "திருத்தணி'யின் படப்பிடிப்பும் விரைவாக நடந்து வருகிறது.ஹிந்தி சினிமா...? ஹிந்தி சினிமாவுக்குச் செல்ல எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அங்கு செல்ல நான் இன்னும் பயணிக்க வேண்டும். காலமும், நேரமும் நிறைய இருக்கிறது. அந்த சமயம் வரும் போது நான் அங்கு இருக்கலாம். ஆனால் அது யார் கையிலும் இல்லை.