குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
டாக்கா, பிப். 8: தெற்காசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 3 வீரர்களும் தங்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 11-வது தெற்காசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சோட் லால், 51 கிலோ பிரிவில் சுரண்ஜாய், 48 கிலோ பிரிவில் அமன்தீப் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.54, 60, 64 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் வங்கதேச வீரர்கள் மூவர் தங்கம் வென்றனர். இந்தப் பிரிவுகளில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.டேக்வாண்டோவில் 4 பதக்கம்: டேக்வாண்டோ போட்டியில் ஆண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சந்தீப் குண்டு, இலங்கை வீரர் ரவீந்திர ராஜபட்சவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லத்திகா பண்டாரி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் நேபாளத்தின் ஆயிஷா தங்கம் வென்றார். 57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சிருஷ்டி சிங்கும், 87 கிலோ பிரிவில் இந்திய வீரர் நகுல் மல்கோத்ராவும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.