ஜவுளி ஏற்றுமதிக்கு வட்டி மானியம்
First Published : 09 Mar 2010 12:23:07 AM IST
Last Updated :
புது தில்லி, மார்ச் 8: ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும், இத்தொழிலில் நிலவும் தேக்க நிலையைப் போக்கவும் வட்டி மானியம் தொடர வேண்டும் என நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக ஜவுளித்துறைச் செயலர் ரீட்டா மேனன் தெரிவித்தார்.கைவினைப் பொருள்கள், கம்பளங்கள் உள்ளிட்ட சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு இச்சலுகை அளிக்கப்படுகிறது. இதைப்போல ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இச்சலுகையை மேலும் ஓராண்டுக்கு அளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் கோரியுள்ளதாக அவர் கூறினார்.2010-11-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்றுமதி வட்டி மானியம் கைவினைப் பொருள்கள்,கைத்தறி, கம்பளம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஏற்றுமதி வட்டி மானியச் சலுகை இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இச்சலுகையை மேலும் ஓராண்டு நீட்டிக்குமாறு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கும், வர்த்தக அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை நீட்டிப்பதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் பயனடைவர்.அதிக அளவில் தொழிலாளர்களை உள்ளடக்கிய தோல், ஜவுளி, கைத்தறி மற்றும் கைவினைத் தொழில் துறைகளைக் காக்க இத்தகைய வட்டி மானிய சலுகை உதவும். சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக 2008-ம் ஆண்டு நவம்பரிலிருந்து ஆடை ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 2009 நவம்பரிலிருந்துதான் இத்தொழில் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் டிசம்பர் மாதமே மீண்டும் சரிவைச் சந்தித்தது. ஆடை வடிவமைப்பு மற்றும் இத்துறை ஏற்றுமதி நிறுவனங்களில் மட்டும் 35 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர, 30 லட்சம் பேர் இத்தொழில் மூலம் மறைமுக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.